சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம் , மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல் கோவிலூர் மற்றும் தாழ் கோவிலூர் கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமங்களுக்கு கொம்புதூக்கி சாலையில் இருந்து 6 கிலோ மீட்டர் மண் சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த மண் சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் டெம்போ வாகனங்கள் மூலம் மெதுவாக, சிரமங்களுக்குட்பட்டே செல்ல வேண்டும். மழைக் காலங்களில் இச்சாலை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் கல்வி, மருத்துவம், ரேஷன் கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இவ்வழியாகதான் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், இது நாள் வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த மேல் கோவிலூர் மற்றும் தாழ் கோவிலூர் கிராமங்களை சேர்ந்த 15 பேர், தங்கள் கிராமங்களுக்கு சாலை அமைக்காததால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி, தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஏற்காடு வட்டாட்சியர் ரமணியிடம் இன்று ஒப்படைக்க வந்தனர்.
சாலை அமைப்பது குறித்து அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் ரமணி உறுதியளித்ததையடுத்து, அம்மக்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
–நே.நவீன் குமார்.