பிரதமர் நேரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் கோயில்கள் என்று கருதி வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கிற முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து, மக்களின் சொத்து. இதை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதை அனுமதிக்க முடியாது.
நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 2022 ஆம் ஆண்டிற்குள் விற்பதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, கப்பல்துறை, ரயில்வே, இந்திய காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் சொத்துக்களை விற்று, இலக்கை அடைய இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் பங்கை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக நிதிநிலை அறிக்கையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைவிட இந்திய காப்பீட்டு கழகத்தை அழிக்கிற முயற்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரலாறு காணாத வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.5 சதவிகிதத்தை விட 8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்காக ரூபாய் 12 லட்சம் கோடி கடன் திரட்டுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்கவோ, விவசாயத்துறையை வளர்த்தெடுக்கவோ, நேரடி பயன்மாற்றத்தின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி, வாங்கும் சக்தியை அதிகரிக்கவோ நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.
கடந்த நிதிநிலை அறிக்கை உரையில், உர மானியம் ரூபாய் 71 ஆயிரத்து 309 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரூபாய் 65 ஆயிரம் கோடி உர மானியம் கூடுதலாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகள் எதையும் செயல்படுத்தாத காரணத்தால் உர உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 1, 2020 நிலவரப்படி வழங்க வேண்டிய ரூபாய் 48 ஆயிரம் கோடி உர மானியம் நிலுவையில் இருக்கிறது. இதனால் உர நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல, இந்திய உணவு கழகத்திற்கு வழங்க வேண்டிய உணவு மானியத்தை மத்திய அரசு வழங்காமல் இருக்கிறது. மார்ச் 31, 2018 அன்று உணவு மானியம் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருந்தது. அது மார்ச் 31, 2020 இல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் பொது விநியோகத்துறை மூலம் வழங்க வேண்டிய உணவு தானியங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், மார்ச் 31, 2021 இல் இந்திய உணவு கழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய உணவு மானியம் ரூபாய் 3 லட்சத்து 48 ஆயிரம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை தான்.
இந்தியாவில் மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 13 லட்சம் கோடியாக அதிர்ச்சி தரும் வகையில் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த தொகையில் 1 சதவிகிதத்தை ஒதுக்கினால் ஒவ்வொரு ஏழைக்கும் ரூபாய் 1 லட்சம் நிதியுதவி வழங்க முடியும். ஆனால், ஏழை எளியவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிற பிரதமர் மோடி, அதானி – அம்பானியின் சொத்துக்களை பெருக்குவதற்கு தான் முனைப்பு காட்டுகிறார். எனவே, தலைவர் ராகுல்காந்தி கூறியபடி, மோடி ஆட்சி ஐந்தாறு தொழிலதிபர்களுக்கு ஆதாயமாகத் தான் செயல்படுகிறதே தவிர, 130 கோடி மக்களுக்காக செயல்படவில்லை என்பதை பா.ஜ.க.வின் நிதிநிலை அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
தன்மூலம் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு பலமடங்கு கூடியிருக்கிறது. பா.ஜ.க.வின் நிதிநிலை அறிக்கை ஏழை,எளியவர்களுக்கு எதிரானது. குறிப்பாக, இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராடுகிற விவசாய பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக நிதிநிலை அறிக்கையில் ஒரு வார்த்தை கூட கூறப்படாதது மோடி அரசின் விவசாய விரோதப் போக்கையே காட்டுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யப்படுகிற வகையில் எந்த அறிவிப்பையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட இந்த அரசு தயாராக இல்லை.
பா.ஜ.க. ஒரு விவசாய விரோத அரசு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் விரோத அரசாக இருப்பதையே இந்த நிதிநிலை அறிக்கை மேலும் உறுதிபடுத்துகிறது.
இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.