புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரைப் பயன்படுத்தி பாஜக நடத்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அநாகரிக அரசியலை எதிர்த்து நாளை ( 24.02.2021) காலை புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜகவின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்குப் பயந்தும், சுய நல நோக்கத்தோடும் காங்கிரசிலிருந்தும், திமுகவிலிருந்தும் விலகி ஜனநாயகப் படுகொலைக்குத் துணை போன அரசியல் தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது! இதை புதுச்சேரி மக்கள் சூளுரையாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதுச்சேரியில் எல்லா இடங்களிலும் டெபாசிட்டை இழந்த பாஜக கொல்லைப்புறமாக புதுச்சேரியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பது அநாகரீகத்தின் உச்சமாகும். இதை கண்டிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
புதுச்சேரி அரசியலை தற்குறிகள் தீர்மானிக்க விட்டுவிட்டால் நாளை அம்மாநிலத்தின் எதிர்காலத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. புதுச்சேரியைக் காப்பாற்ற நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவி அழைக்கிறோம்.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.