தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் பிறப்பையும்; அவரது தாயையும் களங்கப்படுத்தும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராஜா பேசியுள்ளார்.
சபை நாகரீகம் கருதாமல், அநாகரீகமாக பேசியுள்ள ஆ.ராஜாவின் அந்த வீடியோ பதிவை, இதழியல் தர்மத்தை உயிராக மதிக்கும் நாம்; இங்கு மீள பதிவு செய்ய விரும்பவில்லை என்பதை, நமது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
‘நாவடக்கம்’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு; ஒன்று கண்டதை உண்ணாமல் இருப்பது; மற்றொன்று, மற்றவர்களின் மனம் புண்படும்படியாக கடுங்சொற்களை பேசாமல் இருப்பது.
அதனால்தான்,
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்-127)
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (குறள்-128)
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (குறள்-129) -என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.
இதற்கெல்லாம் வரிசை பிரகாரம் என்ன அர்த்தம் தெரியுமா?!
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
இதை நான் சொல்லவில்லை; திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இது ஆராஜாவுக்கு மட்டுமல்ல! அமைச்சர்கள், தொண்டர்கள் உள்பட உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அவர்களின் கவனத்திற்கு: தங்கள் பிறப்பு குறித்தும்; தங்கள் தாயின் கற்பு நெறிக் குறித்தும்; ‘அக்னி’ வார்த்தைகளால் அபிஷேகம் செய்துள்ள ஆ.ராஜாவின் அநாகரீகமான அந்த பேச்சை தயவு செய்து அலட்சியப்படுத்துங்கள். அவர் ஒரு முறை பேசிய அந்த வார்த்தையை, அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதைப் போல அக்னியில் தூக்கியெறிந்து விட்டு, ஆக்கபூர்மான மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுப்படுங்கள்.
இதுக்குறித்து ஆ.ராஜாவின் மீது, தங்கள் தரப்பிலோ (அல்லது) உங்கள் கட்சியின் சார்பிலோ யாராவது காவல்துறையிலோ (அல்லது) நீதிமன்றத்திலோ புகார் அளித்து இருந்தால், தயவுசெய்து உடனே திரும்பப் பெறுங்கள்; அதுதான் தங்கள் தாயாருக்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதை…!
ஏனென்றால், பேச்சு பெரிதுதான்! ஆனால், செயல் அதைவிட பெரிது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதற்கு என் நினைவில் இருக்கும் இரண்டு வரலாற்றுச் சம்பவங்களை இங்கு குறிப்பிட்டால் இதற்கு மிக பொருத்தமாக இருக்குமென்று நான் கருதுகின்றேன்.
1957 – ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் ‘பேரறிஞர் அண்ணா’ அவர்களின் வீட்டுமுன் அவரை இழிவுப்படுத்தி, இதேப்போன்று அவர் பிறப்பு குறித்தும்; அவர் தாயின் கற்பு நெறிக் குறித்தும், அருவருப்புடன் விமர்சித்து, எதிர் கட்சியினர் எழுதி வைத்தார்கள்.
அதற்கு பேரறிஞர் அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?! “இரவில் படிக்கச் சிரமமாக இருக்கும். ஒரு லாந்தர் விளக்கை ஏற்றி வையுங்கள்; இதை எழுதியவரின் தகுதியை ஊர் தெரிந்து கொள்ளட்டும்” என்றார். சொன்னதோடு இல்லாமல், இரவு நேரத்தில் ஒரு லாந்தர் விளக்கையும் ஏற்றி வைத்தார்கள். அத்தகைய சகிப்புத் தன்மையும், பெருந்தன்மையும் இருந்ததால்தான், ‘சி.என்.அண்ணாதுரை’ என்ற மனிதர், “பேரறிஞர் அண்ணா” என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். அதனால்தான் அவர் இறப்பிலும் சாதனைப் படைத்தார்; இறந்த பிறகும் இன்றும் உயிர்வாழ்கிறார்.
அதேபோல, இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், உலகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டவருமான வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchil) அவர்களைப் பார்த்து, ‘நான் மட்டும் உனக்கு மனைவியாக இருந்திருந்தால், உன்னை விஷம் வைத்தே கொன்று இருப்பேன்’ என்று அவையில் ஒரு பெண் உறுப்பினர் ஆவேசமாக கூறியபோது, ‘உன்னைப் போன்ற ஒரு பெண் எனக்கு மனைவியாக கிடைத்திருந்தால், அந்த விஷத்தை நானே மகிழ்ச்சியாக குடித்திருப்பேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறினாராம். அதனால்தான் அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இன்றும் போற்றப்பட்டுவருகிறார்.
இதைதான்,
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை!-என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
அகிம்சை, சத்தியம், தூய்மை, பொறாமையின்மை, குரூரத்தன்மையின்மை, பொறுமை, இவைகள் அனைத்தும் உலகத்தில் உள்ள அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவானத் தர்மங்கள் ஆகும்.
அப்படியானால், ஒரு நாட்டை ஆளுகின்ற தலைவன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை, நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்…!
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
மிக சரியாக சொன்னீர்கள் எடிட்டர் சார் , இதை அனைவரும் வரும் நாள்களில் கடை பிடிப்போம் ….