கடனாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்த 6 மாதங்களுக்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும்!-மத்திய அரசை வலியுறுத்துமாறு 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த சிறு கடனாளர்கள், கடன்களை திருப்பிச் செலுத்த, இரு காலாண்டுகளுக்கு, கூடுதல் அவகாசம் வழங்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோரிடம் ஒன்றிணைந்து வலியுறுத்தவேண்டுமென, ஆந்திரா, பீஹார், சட்டீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும், இலவசமாக வழங்க வேண்டும் என, நாம் வலியுறுத்தினோம். நம் அனைவரின் கூட்டு முயற்சி காரணமாக, பிரதமர் தன் முந்தைய கொள்கையை மாற்றி அமைத்துள்ளார்.

இத்தகைய சூழலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்கள் பிரச்னை தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களும், மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

ஏப்ரல் முதல், உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது, கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை.

எனவே, அவர்களின் கடன்களை திருப்பி செலுத்துவதை தள்ளி வைத்து, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன்.

ஊரடங்கு அறிவிப்பை கருத்தில் வைத்து, 5 கோடி ரூபாய் வரை நிலுவை உள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், கடன்களை திருப்பிச் செலுத்த, இரு காலாண்டுகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.

இந்த கருத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என, உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இக்காலகட்டத்தில் நமது கூட்டு வலிமையை, நாம் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply