ஆட்டம் காட்டிய யோகி ஆதித்தியநாத்!-முற்றுப்புள்ளி வைத்த மும்மூர்த்திகள்!

பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். (நாள்: 11.06.2021)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். (நாள்: 10.06.2021)

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவை, சந்தித்த உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
(நாள்: 11.06.2021)

உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு; இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவாகி, முதலில் அதாவது 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் ‘உத்தராஞ்சல்’ என அழைக்கப்பட்டு, தற்போது ‘உத்தராகண்டம்’ என்று அழைக்கப்படும் மாநிலத்தில், பௌரி கார்வல் மாவட்டத்திலுள்ள பான்சுர் என்ற இடத்தில் 1972 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 5 -ந்தேதி ஆனந்த் சிங் – பிஸ்த் ஆகியோருக்கு மகனாகப் பிறந்து; ‘அஜய் சிங் பிஸ்த்’ எனப் பெயரிடப்பட்டவர்தான் இன்றைய உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரா இருக்கும் யோகி ஆதித்தியநாத் .

கணிதத்தில் இளங்கலை படிப்பை உத்தராகண்டு கார்வல், ஸ்ரீ நகரிலுள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா (எச்.என். பி) பல்கலைக்கழகத்தில் படித்தார்.

1990 ஆம் ஆண்டளவில் அஜய் சிங் பிஸ்த் தன் குடும்பத்தை விட்டு விலகி; அயோத்தி இராமர் கோவில் இயக்கத்தில் சேர்ந்தார். நாத சைவ மரபினரான மகந்த் அவைத்தியநாத்தின் சீடரானார். அதன் பின் இவருக்கு ‘ஆதித்தியநாத் யோகி’ என்னும் பெயர் வழங்கப்பட்டது. துறவிகளின் வழக்கப்படி; இவரது குருவான மகந்த் வைத்தியநாத் இவருக்குத் தந்தையாகவும் ஆனார்.

இதற்கிடையில், கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோரக்நாத் ஆலயத்தால் நடத்தப்பட்டு வரும் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள், துணி வாங்க ஒரு துணி கடைக்கு வந்தபோது, துணி கடைக்காரரிடம் அந்த மாணவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு; வார்த்தைகள் தடித்து; அது பெரும் சச்சரவாக மாறி, கடைக்காரரை அந்த மாணவர்கள் தாக்குவதற்கு முற்பட்டபோது; தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் அந்த கடைக்காரர் கைத்துப்பாக்கியை எடுத்து அந்த மாணவர்களை மிரட்டியுள்ளார்.

அந்த சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ஒரு சன்னியாசியின் தலைமையில், அந்த துணி கடைக்காரருக்கு எதிராக அங்கு தீவிரமான போராட்டம் வெடித்தது. அந்த சன்னியாசி வேறு யாருமல்ல; நம்ம தம்பி யோகி ஆதித்யநாத் தான்.

இந்நிலையில், இவரது குரு மகந்த் அவைத்தியாநாத்தின் மறைவிற்குப் பின்னர், இவர் கோரக்கநாதர் மடத்தின் தலைவரானர். 2002-ல் ‘இந்து யுவ வாகினி’ எனும் அமைப்பை நிறுவி; அதற்கும் இவர் நிறுவனத் தலைவர் ஆனார். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளை விட வேறானது. 2007 ஆம் ஆண்டு மதக் கலவரத்தில் இந்த அமைப்பு தொடர்புபட்டிருந்தது. அந்தக் கலவரத்தின் போது கோராக்பூரில் இருவர் உயிரிழந்தார்கள். பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. யோகி ஆதித்தியநாத் கைது செய்யப்பட்டார். ஆயினும் ஒரு சில தினங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோரக்பூரின் வலிமையான அரசியல் தலைவர்களாக இருந்து வந்த ஹரிஷங்கர் திவாரி மற்றும் வீரேந்திர பிரதாப் ஷாஹியின் பிடி தளர்ந்து வந்த நேரத்தில், யோகி ஆதித்யாநாத் தன் அரசியல் பிரவேசத்தை துவக்கி அதிரடியாக செயல்படத் தொடங்கினார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னணிப் பேச்சாளராக இருந்து வந்த இவர்; கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளைய நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்து மகாசபையின் தலைவராகவும் இருந்த யோகி ஆதித்யநாத், மஹந்த் திக்விஜயநாத்துடன் இணைந்து பணியாற்றினார். அப்போது தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பிகாரிலும் தோல்வியை தழுவிய பாரதிய ஜனதா கட்சி, உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து கவலைப்பட்டது. ஆனால், யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் நிலவியது.

இந்நிலையில் கடந்த 2016 மார்ச் மாதம் கோரக்பூர் ஆலயத்தில் நடைபெற்ற இந்து மகாசபை கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் மூத்த தலைவர்கள், யோகி ஆதித்யநாத்தை உத்தரப் பிரதேச முதலமைச்சராக்குவது என உறுதிபூண்டனர்.

அவற்றின் விளைவு, 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார்.

செல்வி மாயாவதியின் கூத்துக்கள், முலாயம்சிங்கின் கோமாளித்தனங்கள் மற்றும் அவரது வாரிசுகளின் ஆட்டங்கள் அனைத்தையும் பார்த்து விரக்தியில் இருந்த உத்தரப் பிரதேச மாநில மக்கள், யோகி ஆதித்யநாத் மூலம் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்று முழுமையாக நம்பினார்கள்.

ஆனால், ‘நெருப்புக்கு பயந்து; எரிகின்ற அடுப்புக்குள் விழுந்த நிகழ்வாக’ இது மாறிப்போனது.

ஆம், ‘செல்வி மாயாவதி மற்றும் முலாயம்சிங் வகையறாக்களின் ஆட்சியே பரவாயில்லை’ என்று சொல்லுமளவிற்கு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் சிரிப்பாய் சிரித்து சீரழிந்து வருகிறது.

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற அந்த நாள் முதல்; இந்த நிமிடம் வரை, சொந்த கட்சிக்குள்ளும்; ஆட்சி நிர்வாகத்திலும் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய மனிதராகதான் இவர் இருந்து வருகிறார்.

சுப்ரமணியன் சுவாமிக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் மிகபெரிய ஒற்றுமை என்னவென்றால், ‘கல்யாண வீட்டுக்கு போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்; இழவு வீட்டுக்கு போனாலும் தானே பிணமாக இருக்க வேண்டும்’ ஏனென்றால், அப்போது தானே மாலை, மரியாதையெல்லாம் தனக்கே கிடைக்கும்!-இந்த மனநிலைதான் இவர்கள் இருவருக்கும்.

தங்களது எதிர்மறை சிந்தனைகளாலும்; செயல்களாலும் இவர்கள் இருவரும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பிரபலமானவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர்கள் இருவருமே பாரதிய ஜனதா கட்சிக்கு மிகபெரிய தலைவலியாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் ஒட்ட மொத்த கெட்ட பெயருக்கும் யோகி ஆதித்யநாத்தின் தவறான அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக நடவடிக்கைகள்தான் 75 சதவீதம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது; இன்னும் இருந்து வருகிறது என்பதை அவர் வெட்கத்தோடு ஒத்துக்கொண்டு, முதலமைச்சர் பதவியிலிருந்து உடனே அவர் விலகவேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கே தகுதியில்லாத இந்த நபர்; இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தும் முயற்சியில் தனது ஆதரவாளர்கள் மூலம் களமிறங்கி இருப்பது உண்மையிலுமே நமக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்; வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ என்ற கிராமத்து பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது.

பிரதமர் பதவி என்பது அது ஒன்றும் ‘ஸ்டிக்கர்’ பொட்டு அல்ல; நினைத்தவனெல்லாம் எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொள்வதற்கு!

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் யோகி ஆதித்யநாத் பிறந்த நாளான 05.06.2021 அன்று, பிரதமர் நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், யோகி ஆதித்யநாத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காமல் உளவியல் ரீதியாக யோகி ஆதித்யநாத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். (நாள்: 09.06.2021)

மேலும், யோகி ஆதித்யநாத்தை மட்டம் தட்டுவதற்காக; காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதாவை, உத்தரப் பிரதேச அரசியலில் கமிறக்குவதற்காக பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதை கனவிலும் கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத யோகி ஆதித்யநாத், பதறி அடித்துக்கொண்டு டெல்லி சென்றார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பாவ விமோசனப் பரிகாரம் செய்ய தொடங்கியுள்ளார். ஆனால், யோகி ஆதித்யநாத்தை மன்னிக்க பாஜக தலைமை இப்போது தயாராக இல்லை.

இதனால் விரைவில் யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு; அவருக்கு தண்டனையாக மேற்கு வங்கம், கேரளா (அல்லது) தமிழ்நாடு இதில் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. ஒரு வேளை யோகி ஆதித்யநாத் இதை ஏற்க மறுத்தால், கடந்த காலங்களில் அத்வானி, உமா பாரதி.. ஆகியோரின் வரிசையில், யோகி ஆதித்யநாத்தும் அரசியல் அனாதை ஆக்கப்படுவார். இதை செய்தால் மட்டுமே, உத்தரப் பிரதேசத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உயிர் பிழைக்கும்.

அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply