இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையே சுகாதாரம் மற்றும் விவசாயத்துறையில் நிலவி வரும் கூட்டுறவு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக விளங்கி வருவதாகவும், இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவில் சுகாதாரம், வேளாண்மை மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றும் அடித்தளமாக விளங்குகின்றன என்றும் இதர நாடுகளும் இந்த முறையை பின்பற்றலாம் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கவும், ஆய்வு செய்யவும் அவரை சந்திக்க வந்திருந்த நெதர்லாந்து தூதர் மார்டென் வான் தென் பெர்க் தலைமையிலான குழுவினருடன் உரையாடிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பசுமை ஹைட்ரஜன் துறையில் இணைந்து பணிபுரிவதற்கான நெதர்லாந்தின் முன்மொழிதலை வரவேற்ற அமைச்சர், 75-வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சர்வதேச மையமாக ஆக்குவதற்காக தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை அறிவித்ததை சுட்டிக்காட்டினார். திறன்மிகு எரிசக்தி தொகுப்புகள், செயலாற்றும் பொருட்கள், பெரும் தரவுகள் மற்றும் பொருட்களுக்கான இணையம் ஆகியவை கூட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்ததாக அவர் கூறினார்.
சூரிய சக்தி, எரிவாயு சார்ந்த அமைப்புகள், இணைய பாதுகாப்பு, தரவு அறிவியல், நகர்புற தண்ணீர் அமைப்பு மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் எதிர்காலத்தில் இணைந்து பணிபுரிவது குறித்து பேசிய நெதர்லாந்து தூதர், இதன் மூலம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். ஒத்துழைப்புக்கான அமைப்பு சார்ந்த செயல்திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவற்றில் திறம்பட பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு அறிவியலில் ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பும் பேசினர். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் புத்தாக்கத்தில் நெதர்லாந்து பயிற்சியாளர் ஸ்ஜோயெர்ட் மரிஜ்னே முக்கிய பங்காற்றியதாகவும் தூதர் கூறினார்.
–எம்.பிரபாகரன்
Good…