வட இந்தியாவின் கல்வி மையமாக, ஜம்மு வேகமாக உருவாகி வருகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்(தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட தலையீடு மற்றும் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக் ஆகியவற்றுக்கு அவர் அளித்த அதிக முன்னுரிமையால் இது சாத்தியமாகியுள்ளது என அவர் கூறினார்.
ஜம்மு ஐஐஎம் (இந்திய மேலாண்மை கழகம்) 5வது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசியதாவது:
குறுகிய காலத்தில், அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா பாதிப்புக்கு இடையிலும், இந்த கல்வி மையம் முத்திரை பதித்துள்ளது. ஜம்மு, காஷ்மீர் கல்வித்துறையில், பிரதமர் நரேந்திர மோதி அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக ஜம்மு ஐஐஎம் உள்ளது மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கிறது.
ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு முதலீட்டை காணும், குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதி இளைஞர்களுக்கும், ஐஐஎம் மாணவர்களுக்கும் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனாலும், நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், புத்தாக்க தொடக்க நிறுவன முயற்சிகள் மூலம், வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
கடந்த 2016ம் ஆண்டு 54 மாணவர்களுடன் தொடங்கிய ஜம்மு ஐஐஎம்-ல், இன்று 250 மாணவர்கள், சர்வதேச கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் 6 பேர் உட்பட, 30 பிரபல பேராசிரியர்கள் உள்ளனர். 2022ம் ஆண்டுக்குள், ஜகதி என்ற இடத்தில், உங்களுக்கு இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு இணையாக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அழகான வளாகம் கிடைக்கவுள்ளது. அதற்காக உங்களுக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
–திவாஹர்