குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ஆகஸ்ட் 26 முதல் 29 வரை உத்தரப்பிரதேசத்திற்கு (லக்னோ, கோரக்பூர் மற்றும் அயோத்தி) பயணம் மேற்கொள்வார்.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி, லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார்.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான டாக்டர். சம்பூர்ணானந்தின் உருவச்சிலையையும், லக்னோவில் உள்ள கேப்டன் மனோஜ் பாண்டே சைனிக் பள்ளியின் புதிய அரங்கையும் அவர் திறந்து வைப்பார். அதே நாளில் நடைபெறும் லக்னோவின் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார்.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி, கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் மகா வித்யாலயாவிற்கு அடிக்கல் நாட்டி, மகாயோகி கோரக்நாத் விஸ்வ வித்யாலயாவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைப்பார்.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி லக்னோவில் இருந்து ரயில் மூலம் அயோத்தி செல்லும் குடியரசுத் தலைவர், துளசி ஸ்மராக் பவனின் புதுப்பித்தல்/ கட்டமைப்பு மற்றும் நகரப் பேருந்து நிலையம் மற்றும் அயோதி தாம் உள்ளிட்ட உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் பல்வேறு திட்டங்களைத் திறந்துவைப்பார். அயோத்தியில் பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பு அங்கு உருவாக்கப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்குச் சென்று, குடியரசுத் தலைவர் பூஜைகளை மேற்கொள்வார்.
–எஸ்.சதிஸ் சர்மா