20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கு பெற்ற இந்திய தடகள வீரர்களுடன் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் புது தில்லியில் இன்று கலந்துரையாடினார்.
கென்யா நாட்டின் நைரோபியில் கடந்த ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில் 2 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை இந்தியா வென்றது. நீளம் தாண்டுதல் போட்டியின் பயிற்சியாளர் ராபர்ட் பாபி ஜார்ஜ், அஞ்சு பாபி ஜார்ஜ், கமால் அலி கான், இந்திய விளையாட்டு ஆணையகத்தின் தலைமை இயக்குநர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாம் அனைவரும் பெருமை கொள்வதற்கான மிகப்பெரிய தருணம், இது” என்று கூறினார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற எதிர்கால சர்வதேச போட்டிகளிலும் இளம் வீரர்கள் தடம் பதிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்றுக்கு இடையேயும் சிறப்பான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டி அமைச்சர் பாராட்டினார்.
விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும், இளம் வீரர்களின் வளர்ச்சியில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறிய அமைச்சர், சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கு ஏற்ற வசதிகள் மற்றும் மிகச் சிறந்த பயிற்சியை வீரர்களுக்கு வழங்குவதில் அரசு உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா