தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி @ ரவீந்திர நாராயண் ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆர்.என்.ரவி இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கல்லூரி படிப்பை முடித்தவுடன் சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக 1976 -ல் இந்திய போலீஸ் சேவையில் சேர்ந்தார்; அவருக்கு கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி சிபிஐ-யில் பணியாற்றியபோது; கனிம வள சுரங்க மாஃபியாக்கள் உட்பட, பல கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஐ.பி என்று அழைக்கப்படும் (The Intelligence Bureau -IB) உளவுத்துறை பணியகத்தில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரிதும் பணியாற்றி; உள்ளூர் வன்முறையாளர்கள் மற்றும் ஆயுதக் கிளர்ச்சி குழுக்களை அமைதிக்கு கொண்டு வந்தார்.
2012 -ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட; தேசிய நாளிதழ்களில் அவர் கட்டுரைகளை எழுதி வந்தார்.
அதன் பிறகு இந்திய பிரதமர் அலுவலகத்தில் கூட்டுப் புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்ய ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டினார்.
29 ஆகஸ்ட் 2014 அன்று நாகா அமைதி பேச்சுவார்த்தைக்கான மையத்தின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் 2018-ல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு நாகாலாந்தின் ஆளுநராக ஆகஸ்ட் 1, 2019 அன்று பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆர்.என்.ரவி; கோட்டுப் போட்ட கிரண்பேடியா?!-என்பது போக போகதான் தெரியும்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com