ஊட்டச்சத்து மாதத்தின் ஒரு பகுதியாக அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கான பயிலரங்கை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்தின.

ஊட்டச்சத்து மாத நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த பயிலரங்கு ஒன்றை 2021 செப்டம்பர் 9 அன்று பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் நடத்தியது.

‘பெண்களின் ஆரோக்கியம்- நாட்டுக்கே ஒளி’ (சஹி போஷன்- தேஷ் ரோஷன்) எனும் இயக்கத்தில் அமைச்சகத்துடன் நெருங்கி பணியாற்றும் அமைப்புகளுக்காக நடத்தப்பட்ட இந்த பயிலரங்கில், பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

நிகழ்ச்சியில் பேசிய புதுதில்லி எய்ம்ஸின் மூத்த உணவுமுறை நிபுணர் அனுஜா அகர்வாலா, கர்ப்ப காலம், பாலூட்டும் காலம் மற்றும் அதையும் தாண்டி தேவைப்படும் முறையான ஊட்டச்சத்துக்கான தேவை குறித்து விளக்கினார்.

புதுதில்லி எய்ம்ஸின் மூத்த உணவுமுறை நிபுணர் திருமிகு ரிச்சா ஜெய்ஸ்வால், இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து குறித்து பேசினார். வயது வாரியாக தேவைப்படும் ஊட்டச்சத்து குறித்த வரைபடம் தொண்டு நிறுவனங்களோடு பகிரப்பட்டது.

அமைச்சகத்தின் பழங்குடியினர் சுகாதார பிரிவு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சகத்தின் இணை செயலாளர் டாக்டர் நவல்ஜித் கபூர், பழங்குடியினர் சுகாதார ஆலோசகர் திருமிகு வினிதா ஸ்ரீவத்சவா ஆகியோர், பழங்குடியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் இணைந்து ஊட்டச்சத்து மாதத்தின் போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply