பாரதீப் துறைமுக கழகத்தில் புதிய கன்டெய்னர் ஸ்கேனர்!- ஏற்றுமதி இறக்குதி வர்த்தகத்தை ஊக்குவிக்க இலக்கு.

எளிதாக தொழில் செய்யும் நடவடிக்கையின் கீழ், பாரதீப் துறைமுகத்துக்கு எக்ஸ்ரே கன்டெய்னர் ஸ்கேனிக் கருவி(எம்எக்ஸ்சிஎஸ்) வாகனம், ரூ.30 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களை சோதனையிடுவதும், துறைமுகத்தில் கன்டெய்னர்கள் இருக்கும் நேரமும் குறையும். இந்த எம்எக்ஸ்சிஎஸ் ஸ்கேனர் கருவியின் வெற்றிகர பரிசோதனைக்குப்பின், பாரதீப் சுங்கத்துறை தனது வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி உரிமம் வழங்கியது.

இந்த ஸ்கேனர் கருவியால் ஒரு மணி நேரத்துக்கு 25 கன்டெய்னர்களை பரிசோதிக்க முடியும். இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் கன்டெய்னர்களை மேம்பட்ட பாதுகாப்புடன், தடைகள் இன்றி கொண்டு செல்ல முடியும். இது பிரிக்கப்படாத உலோக பொருட்களை கன்டெய்னர்கள் மூலம் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லவும் உதவும். இது உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உள்ளது.

இந்த ஸ்கேனர் செயல்பாட்டால், பாரதீப் துறைமுகத்தின் கன்டெய்னர் கையாளும் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு உதவும் வகையில், கன்டெய்னர் போக்குவரத்து செலவை குறைக்க பாரதீப் துறைமுகக் கழகம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்சிஎல், ஜிம் இன்டர்நேஷனல் ஷிப்பிங் லைன் மற்றும் ஷ்ரயாஸ் ஷிப்பிங் போன்ற நிறுவனங்கள் இந்த துறைமுகத்தை வழக்கமாக பயன்படுத்துகின்றன. பாரதீப் துறைமுகத்தின் மேம்பட்ட வசதிகள் மற்றும் அதிகளவிலான தள்ளுபடி சலுகைகளை பெற மற்ற முன்னணி ஷிப்பிங் நிறுவனங்களும், பாரதீப் துறைமுகத்தை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

திவாஹர்

Leave a Reply