காஞ்சீ வரம் தந்த காவியத் தலைவன்!-அந்த நாள் ஞாபகம்; நெஞ்சிலே வந்ததே…!

‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தின் ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின்.

அண்ணா என்ற ஆளுமை…!
அகிலமே போற்றும் அவரது பெருமை..!

காஞ்சீ வரம் தந்த காவியத் தலைவன்!
நடராச – பங்காரு அம்மாளின் தவபுதல்வன்!

செளமிய ஆண்டில் பிறந்து
சாதாரணக் குழந்தையாக வளர்ந்து
சாமானிய மனிதனாக வாழ்ந்து
சமூக உரிமைகளுக்காக குரல் கொடுத்து
சரித்திரத்தில் என்றும்
சாகா வரம் பெற்றவனே!

பச்சையப்பன் கல்லூரியில் படித்து
பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி
பத்திரிகையாளராக; பத்திரிகை ஆசிரியராக
பல்வேறுப் பணிகளை ஆற்றி
பாமரருக்கும் புரியும் வண்ணம்
பகுத்தறிவுக் கொள்கைகளை
பக்குவமாய் பறைச்சாற்றி
பார் போற்றுமளவுக்கு உயர்ந்தவனே!

முயற்சியை மட்டுமே மூலதனமாக்கி
நேர்மையை ஒன்றையே இலட்சியமாக்கி
கிடைத்ததை உண்டு
எளிமையாக உடுத்தி
இறுதிவரை வறுமையில் உழன்று
வையகம் போற்ற வாழ்ந்தவனே!

பேச்சாற்றல், எழுத்தாற்றல் பெற்றவனே
பொது வாழ்க்கையில்
கடமை, கண்ணியம், கட்டுபாடு காத்தவனே!

அடைந்தால் திராவிட நாடு
இல்லையென்றால் சுடுகாடு!-என்று
வீறுக்கொண்டு எழுந்தவனே!
அதற்கான அவசியமோ; அவசரமோ
தேவையில்லையென தெரிந்தவுடன்
தமிழ்நாடே போதுமென்று சொன்னவனே!

மத்தியிலே கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி!-என்று
பட்டித் தொட்டியெங்கும் முழங்கியவனே! -இதன் மூலம்
தேசியத்திற்கோ; இந்த தேசத்திற்கோ
எதிரானவன் இல்லையென
வெளிப்படையாக உணர்த்தியவனே!

கொண்ட கொள்கைகளில்!-ஏதேனும்
குறைகள் இருந்தால்!
பிடிவாதம் பிடிக்காமல்
பித்தலாட்டம் செய்யாமல்
பிரதிவாதிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து
காலத்திற்கு ஏற்றவாறு
கருத்துப் பறிமாற்றம் செய்தவனே!

கடவுளிடம் உண்மையான
நம்பிக்கையுடன் வாதாடுபவன் நான்!
கடவுளின் பெயரால் நடக்கும்
கொடுமைகளைக் கண்டு
கொதித்தெழுந்து முதலில் போராடுபவனும் நான்!-என்று
பொது வெளியில் பகிரங்கமாக அறிவித்தவனே
!

சமயச் சுரண்டல்களைதான்
நீ பலமாகச் சாடினாய்!-ஆனால்,
ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று
இந்த உலகத்திற்கே நீ பக்குவமாய்
ஓதினாய்..!

ஏழைகளின் சிரிப்பில் நீ இறைவனை கண்டாய்! -உன்
அறிவாற்றலால் இந்த உலகத்தையே நீ வென்றாய்
!

கம்பரசம் கண்டாய்!
தீ பரவட்டும் என்றாய்!
மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய்!
ஆய கலைகள் அறுபத்து நான்கையும்
உன் விரல் நுனியில் கொண்டாய்!
அதனால்தான் என்னவோ!-உன் வாழ்க்கை
திறந்த புத்தகமாகமே அமைந்து விட்டது!

ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில்
”சப் பெல்லோசிப்”-‘என்ற கௌரவ பேராசிரியர் விருது பெற்றவனே!- அமெரிக்கர் அல்லாத ஒருவருக்கு
முதல் முறையாக வழங்கப்பட்ட விருது இதுதானே!

உன்னை எனக்கு பிடிப்பதற்கு
பல காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமான ஒன்றை
இங்கு நான் இன்று குறிப்பிட்டே ஆக வேண்டும்!

தவறு செய்வது தந்தையாக இருந்தாலும்…!-ஏன்
தந்தைப் பெரியாராகவே இருந்தாலும்..!
தயங்காமல்; மதிமயங்காமல்
தைரியமுடன் அவற்றைச் சுட்டிக் காட்டி
தட்டிக் கேட்ட மனசாட்சியுள்ள மனிதன் நீ!
தனி இயக்கம் கண்ட
தரணிப் போற்றும்
வரலாற்றுத் தலைவன் நீ
!

மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றாய்
இரண்டு ஆண்டுகள் மட்டுமே
ஆட்சி பொறுப்பில் நீ இருந்தாய்!
அதற்குள் புற்றுநோய் சிகிச்சைக்காக
அமெரிக்க மருத்துவமனைக்கு நீ சென்றாய்!

ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம்
ஒரு நல்ல தலைவனுக்கு
உண்மையான மணிமகுடம்!-எதுவென்றால்
அவன் வாழும் காலத்தில்;
அவன் ஆளும் தேசத்தில்
மக்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!
அவன் மரிக்கும் தருணத்தில்!-இந்த உலகமே
அவனுக்காக உண்மையாக கண்ணீர் வடிக்க வேண்டும்!
அண்ணா, இந்த அரிய வாய்ப்பு!-இந்த உலகத்தில்
உனக்கு மட்டும்தான் வாய்த்தது!-ஆம்,
உன் மரண ஊர்வலத்தில் கூடிய கூட்டம்
இதுவரை யாருக்கும் கூடியதில்லை
இறுதி ஊர்வலத்திலும்
உலக சாதனைப் படைத்த பெருமை
உனக்கு மட்டும்தான் உண்டு
!

உலக ஏடுகள் அனைத்தையும்
ஒன்றுவிடாமல் புரட்டிய நீ!
புகையிலை பழக்கமும்
மூக்குப் பொடி போடும் வழக்கமும்
உடலுக்கும், உயிருக்கும்
தீங்கு விளைவிக்கும்!-என்பதை
நீ உணர மறுத்தது ஏன்?!
பேரறிஞர்
அண்ணா; நீ உணர மறுத்தது ஏன்?!

காஞ்சீ-வரம்-தந்த-காவியத்-தலைவன்

Leave a Reply