புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (18.09.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், புதிய ஆளுநருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ஆர்.என். ரவியை தமிழ்நாடு ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்தார்.
பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், சில தினங்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 14 -ந்தேதி தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார். அவரை மாநில அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது சென்னை விமான நிலைய வளாகத்தில், புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் உரையாடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட; பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்குப் பெருமைப்படுகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்பச் செயல்படுவேன்.
அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பைச் சிறப்பாகச் செய்வேன். என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.
கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழக அரசு கொரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் ஒட்டுமொத்தச் செயல்பாடு குறித்துக் கூறுவதற்கு எனக்கு சில காலம் அவகாசம் தேவை.
இவ்வாறு புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.