மத்திய உள்துறை இணையமைச்சரை பதவி நீக்கம் செய்து; அவரது மகனை கைது செய்யுங்கள்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, பிரியங்கா காந்தி வேண்டுகோள்.

உத்திரபிரதேச மாநிலம், லக்கிம்பூர், கேரி பகுதியில் நடந்த விவசாயிகள் ஊர்வலத்தில், வேண்டுமென்றே வாகனங்களை கொண்டு விவசாயிகள் மீது மோதியதில், விவசாயிகள் பலர் உயிரிழந்தனர்; இதில் சிலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கடும் கண்டனம் தெரிவித்தார். லக்கிம்பூர் சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த சதி அம்பலமாகும். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவோம். இதற்கு காரணமான குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மற்றும் காயம்பட்ட குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு சென்றனர். ஆனால், பிரியங்கா காந்தி சென்ற வாகனத்தை சீதாப்பூர் பகுதியிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார், அவரைத் தடுத்து அழைத்துச் சென்றனர்.

போலீஸாருடன் பிரியங்கா காந்தி கடும் வாக்குவாதம் செய்தார். “என்னை எதற்காகக் தள்ளிக்கொண்டு சென்று போலீஸார் வாகனத்தில் ஏற்ற முயல்கிறீர்கள்? என்னைத் தாக்க முயல்கிறீர்கள்? என்னைக் கடத்த முயல்கிறீர்களா? என்னைத் துன்புறுத்தி, காயம் ஏற்படுத்த முயல்கிறீர்களா? நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். உங்கள் உயர் அதிகாரிகள், அமைச்சர்களிடம் வாரண்ட் பெற்று வாருங்கள். முதலில் ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்வது எனக் கற்றுக்கொள்ளுங்கள்” என போலீஸாருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தியை நேற்று (04.10.2021) காலை 4.30 மணிக்கு போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு சீதாபூர் பிஏசி விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஜி அவர்களே! இன்று அம்ரித் திருவிழாவை கொண்டாட லக்னோவுக்கு வருகிறீர்கள். அப்படியே லக்கிம்பூருக்கும் போங்கள்; விவசாயிகளின் வேதனையை கேளுங்கள்...!

விவசாயிகள் ஊர்வலத்தில் வேண்டுமென்றே வாகனங்களை கொண்டு மோதியதற்கும், லக்கிம்பூரில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்திற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரது மகனும், அவர்களது ஆதரவாளர்களும் தான் முக்கிய காரணம்.

எனவே, மத்திய உள்துறை இணையமைச்சரை பதவி நீக்கம் செய்து; அவரது மகனை கைது செய்யுங்கள்.

இவ்வாறு பிரதமருக்கு, பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா.

இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்றும், திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது எனவும், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply