வடகிழக்கு பிராந்தியம் கடந்தகால பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு எழுச்சியின் புதிய சகாப்தத்தை காண்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
வடகிழக்கு பகுதி கடந்த கால சிக்கல்களில் இருந்து விடுபட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், இங்கு தீவிரவாத பிரச்சினை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பொருளாதாரம் மேம்பாட்டுடன், உள்கட்டமைப்புகள் விரிவடைந்து வருவதால், எழுச்சியின் புதிய சகாப்தத்தை வடகிழக்கு பகுதி காண்கிறது.
இங்கு தீவிரவாத பிரச்சினை, போதிய உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்ததால், தனியார் முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சி பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது அதில் இருந்து மீண்டு புதிய எதிர்காலத்தை நோக்கி செல்ல வடகிழக்கு பகுதி தீர்மானித்துள்ளதை குறிப்பிடுவதில் பெருமிதம் அடைகிறேன். ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் இங்கு நிறைவடைந்துள்ளன. பல திட்டங்கள் நடந்து வருகின்றன. இது சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு சான்றாக உள்ளது.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
இ-விதான் முறையை அறிமுகம் செய்த முதல் வடகிழக்கு மாநில சட்டப்பேரவை மற்றும் நாட்டின் 3வது சட்டப்பேரவையாக இருப்பதற்காக, அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.
–எஸ்.சதிஸ் சர்மா.