கவலைக்கிடமாக இருக்கும் கல்லணை சாலை..!-கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

திருச்சி பைபாஸ் சாலை, பனையக்குறிச்சி, சர்கார்பாளையம் வழியாக கல்லணை வரை செல்லும் சாலை, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக காவிரி பைபாஸ் சாலை முதல் பனையக்குறிச்சி வரை அச்சாலையில் சிறு, சிறு பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில், சாலையின் மோசமான நிலையை வாகன ஓட்டிகளும் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் வேறு வழியில்லவாமல் சகித்துக்கொண்டார்கள். ஆனால், தற்போது அந்த பணியெல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது.

ஆனாலும், தரமற்ற சாலை பராமரிப்பால் பனையக்குறிச்சி பேருந்து நிறுத்தம், சிவன் கோயில் வளைவு மற்றும் ஒட்டக்குடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.

அதேபோல் பூசைப்படித்துறையில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் மாவட்ட எல்லை தொடங்கி விடுவதால்; தோகூர் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.

இதனால் கல்லணைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும்; அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சாலையை மேற்பார்வையிட்டு பராமரிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்; இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply