ஹஜ் யாத்ரீகர்களுக்கானத் தேர்வு, இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகள், இந்தியா மற்றும் சவூதி அரேபியா அரசுகள் முடிவு செய்யும் விதிமுறைகள்படி இருக்கும் என்று மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி கூறினார்.
ஹஜ் யாத்திரை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையின விவகார அமைச்சக செயலாளர் ரேணுகா குமார் , சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதர் டாக்டர் ஹாசுப் சையீத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஹஜ் பயணத்துக்கான இடஒதுக்கீடு வாடகை விமானம், கொரோனா நெறிமுறைகள், தடுப்பூசிகள், மருத்துவ வசதிகள், சுகாதார அட்டை, சவூதி அரேபியாவில் போக்குவரத்து ஆகியவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதன்பின் பேட்டியளித்த மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி கூறியதாவது:
ஹஜ் யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் சுகாதார அட்டை, மெக்கா, மதீனாவில் தங்குமிடம், போக்குவரத்து தொடர்பான அனைத்துத் தகவல்களும் வழங்கப்படும். சவூதி அரேபியா மற்றும் இந்திய அரசுகளின் கொரோனா நெறிமுறைகளை மனதில் வைத்து 2022-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையும் தொடங்கப்படும்.
ஹஜ் யாத்திரைக்கான நடைமுறை 100 சதவீதம் டிஜிட்டல் மயமானது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஹஜ் யாத்திரைக்கு ஆண்கள் துணையின்றி செல்ல 3000 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களும் 2022 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு தகுதியானவை. 2022ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இதரப் பெண்களும் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் துணையின்றி செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் குலுக்கல் முறையிலான தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு முக்தார் அபாஸ் நக்வி கூறினார்.
–எம்.பிரபாகரன்