உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் நகோசி ஒகோஞ்சோ-இவேலா சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் உரையாடல்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் மேன்மைமிகு நகோசி ஒகோஞ்சோ-இவேலா, தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஆதரவு பெற்று இயங்கி வரும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் 2021 அக்டோபர் 22 அன்று உரையாடினார்.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சரண்ஜித் சிங் தலைமை வகித்த இந்த உரையாடலில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இயக்குநர் திரு ராகவேந்திர பிரதாப் சிங் மற்றும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் தேசிய திட்ட மேலாண்மை பிரிவின் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு அபிமன்யு சர்மாவும் இதில் பங்கேற்றார்.

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் கொரோனா பெருந்தொற்றின் போது சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் திரு சரண்ஜித் சிங் விளக்கினார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமிகு ராம்பேட்டி சென், பீகாரைச் சேர்ந்த திருமிகு சுஷ்மா தேவி, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த திருமிகு ஜமுனா, கேரளாவை சேர்ந்த திருமிகு சுஜாதா உன்னிகிருஷ்ணன் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திருமிகு நந்தினி தேவி உள்ளிட்ட சுய உதவிக் குழு பிரதிநிதிகளுடன் உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் மேன்மைமிகு நகோசி ஒகோஞ்சோ-இவேலா காணொலி மூலம் உரையாடினார்.

சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பணிகள், சுய உதவிக் குழுவில் சேர்ந்த அனுபவம், அதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் சவால்களை அவர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது குறித்து அவர் கேட்டு அறிந்துகொண்டார்.

தங்கள் வாழ்விலும் சமூகத்திலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்திய சுய உதவிக் குழு உறுப்பினர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்த உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர், பெருந்தொற்றின் போது சுய உதவிக் குழு உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகளை பாராட்டியதோடு அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply