திருமண தகவல் மையம் என்ற பெயரில், வரன் பார்த்து தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பணம் பெற்றுக் கொண்டு, மோசடி செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தை உண்மை என்று நம்பி, திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு பெண் தேடி தருமாறு 7092006595- என்ற அலைபேசியிலும், அதே வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு மணமகனின் அண்ணன் பேசியுள்ளார்.
எதிர் முனையில் பேசிய ஒரு பெண், நாங்கள் சில பெண்களின் ஜாதகத்தையும், போட்டோவையும் இலவசமாக அனுப்பி வைக்கிறோம். உங்களுக்கு பெண் பிடித்திருந்தால், நாங்கள் அனுப்பும் வங்கிக் கணக்கிற்கு ரூ.1500/- உடனே செலுத்துங்கள். உடனே பெண் வீட்டாரின் முகவரியையும்; முழு விபரத்தையும் வாட்ஸ்அப் மூலம் நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று அந்த பெண் கூறியதோடு; திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் என்று குறிப்பிட்டு, சில குடும்பபாங்கான பெண்களின் போட்டோவையும், ஜாதகத்தையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பி, அதில் சில பெண்களை மணமகனின் குடும்பத்தாருக்கு பிடித்திருப்பதாக சொல்லி, பெண் வீட்டாரின் முகவரியையும், முழு விபரத்தையும் பெறுவதற்காக அந்த பெண் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.1500/ -யை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து இவர்களுக்கு எந்த தகவலும் வரவில்லை; பலமுறை தொடர்புகொண்டும், இவர்களின் செல்போன் அழைப்பை அந்த பெண் எடுக்கவில்லை.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான மணமகனின் குடும்பத்தார், சில நாட்களுக்கு பிறகு நடந்த விபரத்தை மணமகனிடம் கூறியுள்ளனர்.
மணமகன் வேறு ஒரு சிம் கார்டை பயன்படுத்தி, அதே மோசடி பெண்ணின் 7092006595- என்ற அலைபேசியை தொடர்பு கொண்டு பேச; அந்த மோசடி பெண் என்ன சொல்கிறாள்?! என்பதை கீழ்காணும் பதிவில் நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
திருமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கவில்லை என்று, பல ஆண்டுகளாக அலைந்துகொண்டிருக்கும் பெற்றோர்களை குறிவைத்து, திருமண தகவல் மையம் என்ற பெயரில், இதுபோன்ற மோசடி பேர்வழிகள் ஆன்லைன் மூலம் வலை விரித்து காத்து கிடக்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.
மேலும், ஏற்கனவே திருமணமான ஆண்/பெண் பலர்; அதை மறைத்து பணத்திற்காகவும், நகைக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மற்றும் காமத்திற்காகவும் ஆசைப்பட்டு, தங்களைப் பற்றிய பொய்யான தகவல்களை, ஆன்லைன் திருமண தகவல் மைய இணைய தளங்களில் பணம் செலுத்தி பதிவு செய்து; பல ஒழுக்கமான குடும்பத்தைச் சேர்ந்த ஆண்/ பெண்களை ஏமாற்றி பலதாரா மணங்களை செய்கின்றனர்.
ஆன்லைன் மூலம் திருமண தகவல் மையம் நடத்தும் நபர்களுக்கு; பணம் மட்டுமே பிரதானமாக இருப்பதால், இவற்றையெல்லாம் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. சட்ட விரோதமான பல மோசடி திருமணங்கள் நடைபெறுவதற்கு, ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் தான் முக்கிய காரணியாக இருக்கிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் திருமண தகவல் மைய தரவுகளை முறையாக ஆய்வு செய்து; அவற்றை வரையறை செய்து; அவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்து உத்தரவிட வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com