மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 6255 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன் வளம். கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்தில் 1178 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென்று கோரி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை குறை கூறினார்.
தமிழக அரசு கோரிய தொகையை விட அதிகமாக, இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 02.11.2021 அன்று 1361 கோடி ரூபாய் விடுவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் செம்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்படுத்தப்பட வேண்டுமென்று முனைப்புடன் குறைத் தீர்க்கும் அமைப்பு, சுயேச்சையான, சமூக தணிக்கை உட்பட நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், ஆனால் இதனை தமிழக அரசு பின்பற்றவில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 246 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் கூறிய அமைச்சர், இதில் இதுவரை வெறும் 1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், தமிழக அரசு 2190 லட்சம் மனித வேலை நாட்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கான நிலுவைத் தொகை இருப்பதாகவும், அதனை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும். ஒரு வாரத்திற்குள்ளாக அந்த தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார். வாக்குறுதி அளித்தபடி தொகை விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு வேண்டுமென்றே மத்திய அரசை களங்கப்படுத்தும் விதத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின் நலன் குறித்து மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரிய போதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை என்று அவர் கூறினார். தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கினால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது காலதாமதமாகி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று திருச்சியில் தம்மை சந்தித்ததாகவும். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதியை தாம் அளித்திருப்பதாகவும் அவர்களின் விடுதலையில் காலதாமதம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழ்நாட்டில் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் துப்பாக்கிச்சுடு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று கூறிய அமைச்சர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் துப்பாக்கிச்சுடு சம்பவம் மீண்டும் நடைபெற்றிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்த அமைச்சர், இது பற்றி அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனைப் பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார்.
பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ். நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இத்திட்டம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்திற்கு இத்திட்டத்தின் கீழ் 9.12 லட்சம் மெட்ரிக் டன் அரிசி, கோதுமை வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா
சைபர் குற்றவாளியை சமாளிக்கும் வங்கி வாடிக்கையாளர்!