மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde), அடுத்த சில மாதங்களில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள், இன்று (03.06.2014) காலை நிகழ்ந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது இந்திய அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde), மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை இருந்துள்ளார்.
1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
1995-1999-ல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு 15-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களவையில் பா.ஜ.க.வின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.
கடந்த மே 26, 2014 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று (03.06.2014) காலை 6.30 மணியளவில், புதுடெல்லியில் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக் காரணமாக, மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்துக் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோபிநாத் பாண்டுரங்க முண்டேயின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
மத்திய அமைச்சராக இருக்கும் கோபிநாத் பாண்டுரங்க முண்டேக்கு, முறையாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா? அப்படியானால், அமைச்சரின் கார் செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்தார்கள்?
பொதுவாக, அமைச்சர் அல்லது முக்கிய பிரமுகரின் காருக்கு முன்பாகவும், பின்பாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் செல்வது வழக்கம். அப்படி இருக்கும் போது, எப்படி இந்த விபத்து நடந்தது?
சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போதும், கோபிநாத் பாண்டுரங்க முண்டேவின் கார் ஓட்டுநர் வீரேந்திர குமார் காரை நிறுத்தவில்லை என, முண்டேவின் கார் மீது மோதிய காரின் ஓட்டுனர் குர்வீந்தர் சிங், போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சிக்னலில் நிற்காமல் சென்றதால்தான், முண்டேயின் கார் மீது, இண்டிகா கார் மோதியதாக சொல்லப்படுகிறது. அப்படியானால், பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
சம்மந்தப்பட்ட அமைச்சரே, பாதுகாப்பு வேண்டாம் என்று கூறினாலும் கூட, அவரின் உயிரை காக்க வேண்டிய கடமை, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உண்டா, இல்லையா?
நடந்தது விபத்தாக இருந்தாலும், திட்டமிட்டச் சதியாக இருந்தாலும், சாலை விதிமுறை மீறலாக இருந்தாலும், அத்தனைக்கும் அடிப்படைக் காரணம், பாதுகாப்பு அதிகாரிகளின் கவனக் குறைவும், கையாலாகாதத் தனமும்தான்.
ஒரு மத்திய அமைச்சரின் காருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அதிகாரிகள், சாதாரண அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்?
-டாக்டர் துரைபெஞ்சமின்.