புதுமையான படைப்பாற்றலுடன் கலந்த அறிவியல் சாதாரண மக்களுக்கு சுலபமான வாழ்க்கையை கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேச்சு.

மத்திய அறிவயல் மற்றும் தொழில்நுட்பம்( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், புதுமையான படைப்பாற்றல் திறனுடன் கலந்த அறிவியல், சாதாரண மக்களுக்கு சுலபமான வாழ்க்கையை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்தியாவில், அறிவியல் என்பது ஆராய்ச்சிக்கான விஷயம் மட்டுமல்லாமல், கொண்டாட்டத்துக்கானதும் ஆகும். இளைஞர்களின் சிந்தனையை ஊக்குவிக்க இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் அறிவியல் விழா கொண்டாடுவது அவசியம் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். கோவா மாநிலம், பனாஜியில் டிசம்பர் 10 முதல் 13 வரை நடைபெறவுள்ள ஏழாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் முன்னோடி கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இந்த ஆண்டு அறிவியல் விழாவுக்கான கருப்பொருள் ‘ விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாகும்’ என்று தெரிவித்த டாக்டர் ஜித்தேந்திர சிங், இந்தியாவின் முன்னேற்றம் படைப்பாற்றல், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்தப் பிரம்மாண்டமான விழாவில், இந்தக் கருப்பொருளை உள்ளடக்கிய 12 நிகழ்ச்சிகள் நடைபெறும். சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா 2047-ல் நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, அதில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறப்போகும் இப்போதைய இளைஞர்கள், நாட்டை உலகின் முன்னணி நாடாக உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

திவாஹர்

Leave a Reply