11 வயது சிறுவனின் தலையில் பாய்ந்த தோட்டா!- மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது நடந்த விபரீதம்!

புதுக்கோட்டை, மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force -CISF) வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது குறி தவறி சென்ற தோட்டா ன்று; துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சீறி பாய்ந்து; நார்த்தாமலை பகுதியில் தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த 11 வயது சிறுவன் புகழேந்தி என்பவரின் தலையில் பாய்ந்தது.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் புகழேந்தியை முதலில் கீரனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன்பின்பு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

சிறுவன் புகழேந்தியின் சொந்த ஊர் நார்த்தாமலை அருகே உள்ள கொத்தமங்கலம் பட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை நாம் பதிவேற்றம் செய்வதற்கு முன்பு; அதாவது இன்று (30.12.2021) மாலை 6.33 மணியளவில் இச்சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கீரனூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் நாம் விவரம் கேட்டோம்.

இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், பொதுமக்களிடமும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின் முடிவு தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் செல்ல முடியும் என்றார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply