விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கலா கும்ப நிகழ்வு வேற்றுமையில் ஒற்றுமையின் சாரத்தை பிரதிபலித்தது.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாட புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 750 மீட்டர் நீளத்தில் சுருள்களில் ஓவியம் வரைவதற்கான கலா கும்ப ஓவியர் பயிலரங்கை நடத்தியது.

பிரம்மாண்டமான சுருள்களில் செய்யப்பட்ட கலைப் படைப்புகள் 2022 குடியரசு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், கலாச்சார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான தனித்துவமான ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய நவீன கலைக்கூடத்தின் தலைமை இயக்குநர் திரு .அத்வைதா காரநாயக் இதனைத் தெரிவித்தார்.

“இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் வீர வாழ்க்கையையும் போராட்டங்களையும் சித்தரிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. ஒடிசா மற்றும் சண்டிகரில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்களால் இவை ஆர்வத்துடன் ஆய்வு செய்யப்பட்டு வரையப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் உண்மையான சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு வகையான காட்சி மற்றும் நிகழ்த்து கலைகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடம் இந்த பயிலரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. ராஜ்பத்தில் காட்சிப்படுத்தப்படும் பிரம்மாண்டமான சுருள்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் வரலாற்றை ஆழமாக ஆராய்வதில் அனைவரின் ஆர்வத்தையும் ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply