ரஷ்ய நாட்டின் அத்துமீறிய படையெடுப்பால், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மாநகரம் உள்பட, பிரதான நகரங்கள் அனைத்தும் யுத்த களமாக மாறியுள்ளது. ரஷ்ய படையினர் போர் மரபுகளை மீறி பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கடந்த இரண்டு வார காலமாக தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைன் நாட்டு முக்கிய நகரங்கள் அனைத்தும் தற்போது ரத்த பூமியாக மாறி உள்ளது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் கவலையில் ஆழ்ந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய கேள்விக் குறியாக தற்போது மாறியுள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இது மூன்றாவது உலக யுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டு இராணுவத்தில் பணிபுரியும் லெசியா -வலேரி என்ற காதல் ஜோடி, உக்ரைன் தலைநகர் கீவ் மாநகரத்தில் சக இராணுவ பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், எளிமையான முறையில் நேற்று (06/03/2022) திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் கீவ் மாநகர மேயரும் கலந்து கொண்டு அந்த காதல் தம்பதியை வாழ்த்தினார்.
லெசியா -வலேரி என்ற இந்த காதல் ஜோடி இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததோடு; இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து வாழ்ந்து வந்தனர். இருவரின் காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தைக்கு தற்போது 18 வயது ஆகிறது.
கடந்த 20 ஆண்டு காலமாக தங்கள் திருமணத்தை ஏதோ காரணத்திற்காக காலம் கடத்தி வந்த இந்த காதல் ஜோடி, யுத்தத்தால் உருக்குலைந்து வரும் உக்ரைன் நாட்டு தலைநகரில் நேற்று (06/03/2022) அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டு, உக்ரைன் நாட்டிற்கு மட்டுமல்ல; இந்த உலகத்திற்கே இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளனர்.
அதனால்தான்,
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
-என்கிறார் நம் திருவள்ளுவப் பெருந்தகை
ஆம்,
துன்பம் வரும்போது அதைக் கண்டு கலங்காமல, அதைப் பார்த்து சிரித்து விட்டு. அத்துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வேண்டும். அப்படி செய்தால் அதைப் போன்றது வேறு இல்லை.
இவர்களின் மகிழ்ச்சி இறுதிவரை நிலைக்கவேண்டும்!-உக்ரைன் நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்!
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com