பாசஞ்சர் இரயில்களை மணியாச்சி சந்திப்பிலிருந்து பைபாஸ் வழித்தடத்தில் இயக்க “பச்சை விளக்கு” எரியுமா?

maniyatchi maniyatchi.jpg1தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி பாசஞ்சர் இரயில்களின் பயண நேரத்தை குறைத்திட மணியாச்சி சந்திப்பிலிருந்து பைபாஸ் வழித்தடத்தில் இரயில்களை இயக்கவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில் தூத்துக்குடி – திருநெல்வேலி வழித்தடத்தில் மட்டுமே பைபாஸ் டிரக் வழியாக பாசஞ்சர் இரயில்களை இயக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் சரக்கு இரயில் பை-பாஸ் வழியாகத்தான் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் இரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம்,மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் இரயில்கள் நாகர்கோவில் டவுண் இரயில் நிலையம் வழியாக பைபாஸ் டிரக்கில் இயக்கப்படுகின்றன. இதே போன்று கோயம்புத்தூர்,அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற நடைமுறை உள்ளது.

ஆனால், தூத்துக்குடி – திருநெல்வேலி பாசஞ்சர் இரயிலுக்கு மட்டும் இந்த அனுமதி மறுக்கப்படுவது புரியாத புதிராக இருக்கிறது. பைபாஸ் வழித்தடத்தில் இரயிலை இயக்கினால் சரியான நேரத்திற்கு சென்று மற்ற இணைப்பு இரயில்களை பிடிக்கலாம். அத்துடன் மிச்சமாகும் பயணநேரத்தால் தென்காசி,செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கும் கூடுதல் இரயில்களை எளிதில் இயக்கமுடியும் என்று அவர் தெரிவித்தார்.

-பொ.கணேசன் @ இசக்கி.