இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் விக்ரம் ஜேசிங், தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பதில் உதவிச் செயலாளர் ஜேம்ஸ் ஆர்.மூர், ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கு பதில் உதவிச் செயலர் ஜோன்.பி.ஸிம்மர்மன் ஆகியோர் உள்ளிட்ட இந்தக் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.
27.01.2013 காலை விமானம் மூலம் யாழ்பாணம் வந்த இவர்கள், பலாலி இராணுவத் தலைமையகத்தில் யாழ்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கேவைச் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதனைத் தொடர்ந்து யாழ்பாண ஆயர் இல்லத்தில் ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
இலங்கையில் இன்னமும் போர் ஓய்ந்துவிடவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும், இப்போது மக்கள் மீதான அரசின் கெடுபிடிகளும், இறுக்கமான நடைமுறைகளும் அதிகரித்தேயுள்ளன.
வடபகுதியில் வாழும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதோடு, தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதுதான அடக்கு முறையும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. ‘வடபகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இருந்த போதும் காணாமல் போனவர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது குறித்த தவறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
காணமல் போனவர்களை நினைத்து இப்போதும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எண்ணி கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கின்றார்கள்.
வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதும் தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறதே தவிர அதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை.
அரசாங்கம் பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று எண்ணிக்கொள்கிறது.
இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும்’ என்று யாழ்பாண ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம், அமெரிக்க உயர் மட்டக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.