பெர்லின், கோபன்ஹெகன், பாரிஸ் பயணத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோதி விடுத்துள்ள புறப்பாடு அறிக்கை!

ஜெர்மனியின் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்று, மே 2-ந்தேதி நான் பெர்லின் செல்கிறேன். இதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் கோபன்ஹெகனில் மே 3-4 ஆகிய தேதிகளில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரெடரிக்சென் அழைப்பை ஏற்று பயணம் மேற்கொள்கிறேன். டென்மார்க் பிரதமருடன் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நான், இரண்டாவது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளேன். இந்தியா வரும் வழியில், பாரிசில் சிறிது நேரம் தங்கியிருந்து, பிரான்ஸ் அதிபர்இமானுவேல் மாக்ரோனை சந்திக்கிறேன்.

பெர்லினுக்கான எனது பயணம், பிரதமர் ஸ்கோல்சுடன் விரிவான இருதரப்பு விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பாக அமையும். ஸ்கோல்ஸ் துணை பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தபோது அவரை இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டின் போது சந்தித்துள்ளேன். ஜெர்மனியுடனான தனித்துவமான ஈராண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஆறாவது இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்திற்கு நாங்கள் இணைந்து தலைமை ஏற்கிறோம். இந்த ஆலோசனை ஜெர்மனியுடன் மட்டும் நடத்தப்படுகிறது. பல்வேறு இந்திய அமைச்சர்கள் ஜெர்மனிக்கு பயணம் செய்து, அவர்களது ஜெர்மானிய அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

ஜெர்மனியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அமைச்சரவை அமைந்து ஆறு மாதங்களுக்குள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம், நடுத்தர கால மற்றும் நீண்ட காலத்துக்கான நமது முன்னுரிமைகள் பற்றி அடையாளம் காண உதவும் என நான் கருதுகிறேன்.

2021-ல், இந்தியாவும், ஜெர்மனியும் தூதரக உறவுகள் அமைந்ததன் 70-வது ஆண்டைக் கொண்டாடின. 2000-வது ஆண்டு முதல் இருநாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. ஜெர்மனி பிரதமருடன் இரு தரப்புக்கும் பயன் விளைக்கும் பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலக நிகழ்வுகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

இந்தியா- ஜெர்மனி இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றான நீண்டகால வர்த்தக உறவுகள் பற்றி, ஜெர்மனி பிரதமருடன் நானும் கூட்டாக வர்த்தக வட்டமேஜை கூட்டத்தில் உரையாற்றவுள்ளோம். இரு நாடுகளிலும், கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க நடவடிக்கைகளுக்கு இது பெரிதும் வலுவூட்டுவதாக அமையும்.

ஐரோப்பிய கண்டத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். ஜெர்மனியிலும் கணிசமான அளவு இந்தியர்கள் உள்ளனர். ஐரோப்பாவுடனான நமது உறவுகளுக்கு இந்திய வம்சாவளியினர் உறுதியான நங்கூரமாக உள்ளனர். எனவே இந்தப் பயணத்தின் வாயிலாக நமது சகோதர, சகோதரிகளைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்வேன்.

பெர்லினில் இருந்து நான் கோபன்ஹெகன் பயணம் மேற்கொள்கிறேன். பிரதமர் பிரெடரிக்செனுடன் நான் இருதரப்பு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளேன். டென்மார்க்குடனான தனித்துவமான ‘ பசுமை பாதுகாப்பு கூட்டாண்மை’’ மற்றும் இதர இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இது வாய்ப்பாக அமையும். இந்தியா-டென்மார்க் வர்த்தக வட்டமேஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நான், டென்மார்க்கில் உள்ள இந்திய சமுதாயத்தினர் இடையே கலந்துரையாடுவேன்.

டென்மார்க்குடன் இருதரப்பு நிகழ்ச்சிகள் தவிர, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளும் இரண்டாவது இந்தியா- நோர்டிக் உச்சிமாநாட்டிலும் நான் கலந்து கொள்கிறேன். 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா- நோர்டிக் உச்சிமாநாட்டுக்குப் பிந்தைய நிலை குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம். இந்த உச்சிமாநாடு, பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்கம், பருவநிலை மாற்றம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இந்தியா-நோர்டிக் ஒத்துழைப்பால் ஆர்டிக் பிராந்தியத்தில் நிலவும் உலக பாதுகாப்பு சூழல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும்.

உச்சிமாநாட்டின் போது, இதர நான்கு நோர்டிக் நாட்டு தலைவர்களை நான் சந்தித்து, அவர்களுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வேன்.

நிலைத்தன்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிடல்மயமாக்கம், புத்தாக்கம் ஆகியவற்றில் நோர்டிக் நாடுகள் இந்தியாவின் முக்கிய பங்குதார நாடுகளாகும். நோர்டிக் பிராந்தியத்தில் நமது பன்முக ஒத்துழைப்பை விரிவாக்க இந்தப் பயணம் பயன்படும்.

பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது, பாரிசில் சிறிது நேரம் தங்கி எனது நண்பர் அதிபர் மாக்ரோனை சந்திப்பேன். அதிபர் மாக்ரோன் மிக அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முடிவுகள் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் நான் எனது வாழ்த்தை நேரில் தெரிவிப்பதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை உறுதிசெய்வேன். இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டாண்மையின் அடுத்த கட்டத்துக்கான தொனியை உருவாக்கும் வாய்ப்பை இது எங்களுக்கு வழங்கும்.

பல்வேறு பிராந்திய உலக விஷயங்கள் பற்றிய மதிப்பீடுகளை நானும், பிரான்சு அதிபரும் பகிர்ந்து கொள்வோம். இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் ஆய்வு செய்வோம். உலக ஒழுங்குக்கான ஒரே மாதிரி பார்வை மற்றும் விழுமியங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதுடன், பரஸ்பர நெருங்கிய ஒத்துழைப்புக்கு உழைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.

ஐரோப்பிய பிராந்தியம் பல சவால்கள் மற்றும் தேர்வுகளைச் சந்தித்து வரும் சமயத்தில் எனது பயணம் நிகழ்கிறது. எனது பங்கேற்பு நிகழ்ச்சிகள் மூலம், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான இந்தியாவின் தாகத்துக்கு முக்கிய நண்பர்களான நமது ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த எண்ணியுள்ளேன்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply