தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.6.2022) தொழில் துறை சார்பில், சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சென்னை டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டை மேம்பட்ட உற்பத்தி மையமாக (Advanced Manufacturing Hub) உருவாக்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு, அதற்கான பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (Industry 4.0) தமிழ்நாட்டின் மாணவர்களையும், தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் தயார்படுத்திக் கொள்வதற்கு தொலைநோக்கு பார்வையுடன் “நான் முதல்வன்” திட்டம், “அறிவுசார் நகரம்” (Knowledge City) மற்றும் ஆராய்ச்சி பூங்காக்கள் (Research Parks) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை சார்பில் சென்னை, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
–எஸ்.திவ்யா