சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நடப்பு சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. காலிறுதி ஆட்டத்தில் அவர் சீன வீராங்கனையை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து. சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 500 தொடரில் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளார். பரபரப்பாக நடைபெற்ற காலிறுதியில் சீன வீராங்கனை Han Yue-வை 17-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் சிந்து வீழ்த்தி உள்ளார்.

இந்த போட்டி சுமார் 62 நிமிடங்கள் நீடித்தது. முதல் செட்டை இழந்து போட்டியில் பின்னடைவை சந்தித்தார் சிந்து. இருந்தும் ஆர்ப்பரித்து எழுந்து பூப்பந்தை புயலாக ஸ்மேஷ் செய்தார். அவரது ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்க தவறினார் Han. காமன்வெல்த் போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் இந்த தொடர் சிந்துவுக்கு அமைந்துள்ளது. அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை சைனா கவாகாமி (Saena Kawakami) எதிர்கொள்கிறார் சிந்து.

சாய்னா நேவால் தற்போது காலிறுதி போட்டியில் விளையாடி வருகிறார். அவர் முதல் செட்டை இழந்துள்ளார். மறுபக்கம் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் பிரணாய், ஜப்பான் வீரரிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply