இந்திய தகவல் பணி அதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மாநாட்டை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா மற்றும் முதன்மை தலைமை இயக்குநர் திரு ஜெய்தீப் பட்நாகர், திரு சத்யேந்திர பிரகாஷ், திரு வேணுதர் ரெட்டி மற்றும் திரு மயங்க் குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள இந்திய தகவல் பணி மூத்த அதிகாரிகள் இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தமது சிறப்புரையில், அரசுத் தொடர்புகளை வரையறுக்க வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டினார். குடிமக்களை மையமாகக் கொண்ட கருணையுடன் கூடிய அணுகுமுறை, தொடர்ச்சியான திறன் மேம்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இதைப் பற்றி விரிவாகக் கூறிய அவர், குடிமக்களை மனதில் வைத்து அனைத்து தகவல்தொடர்புகளும் பொருத்தமானதாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றார். மேலும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். தகவல்தொடர்பு என்பது போலிச் செய்திகள் போன்ற வரவிருக்கும் சவால்களுடன் வேகமாக மாறிவரும் ஒரு துறையாக இருப்பதால், சமீபத்திய கோவிட் பெருந்தொற்றின் போது காணப்படுவது போல், தொடர்பாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்களாக இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
போலிச் செய்திகளை எதிர்கொள்வதற்காக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை விரிவுபடுத்துதல் மற்றும் ஆற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் முயற்சிகள் போன்ற உருமாற்ற முயற்சிகளை மேற்கொள்வதில் ஐஐஎஸ் அதிகாரிகளின் பங்கை திரு அனுராக் சிங் தாக்கூர் பாராட்டினார். புதிய ஊடக தொழில்நுட்பங்கள், நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தொலைதூரத்துக்கும் பயனளிக்கும் வகையில் அரசாங்க தகவல்தொடர்புகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் முன்முயற்சிகளையும் அவர் முன்வைத்தார். 130 கோடி மக்களுக்கு தகவல்தொடர்பாளராக தங்கள் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தினார். பொது மக்களின் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு ஒத்திசைக்கப்பட்ட தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். நிறுவனத்தை உருவாக்குதல், வழிகாட்டுதல் மற்றும் அதிகாரிகளின் உந்துதல் ஆகியவை சம அளவில் முக்கியமானவை என்று அவர் கூறினார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருஅபூர்வ சந்திரா கூறுகையில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தகவல் தொடர்பு பொதுமக்களுக்கு உறுதியளித்தது, மேலும் அவர்களின் மனதில் இருந்து பயத்தை அகற்றுவதில் வெற்றி பெற்றது. தடுப்பூசி மற்றும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா போன்ற நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே பரவலான விழிப்புணர்வை இது உறுதி செய்தது. பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தடுப்பூசி தயக்கம் கிட்டத்தட்ட இல்லை, இது 200 கோடி தடுப்பூசி டோஸ் சாதனையை நெருங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முதன்மை தலைமை இயக்குநர் திரு ஜெய்தீப் பட்நாகர் , இந்த சேவையின் முதன்மையான கவனம் அதிகாரமளித்தல் மற்றும் அணுகல், குடிமக்களை மையமாகக் கொண்ட இரவு,பகல் ஈடுபாடு, நடத்தை மாற்ற தொடர்பு மற்றும் போலி மற்றும் குறும்புச் செய்திகளை எதிர்த்துப் போராடுவதில் உள்ளதாக தெரிவித்தார்.
தகவல் தொடர்புத் துறையானது இயல்பாகவே ஆற்றல் மிக்கது என்பதை உணர்ந்து, இரண்டு நாள் மாநாடு வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் அதிநவீன தகவல்தொடர்புக்கான செயல் திட்டம் குறித்து விவாதிக்கும். ‘இந்தியாவுக்கான தொடர்பு@2047’, ‘G20 இல் கவனம் செலுத்தி வெளிநாட்டில் இந்தியாவைத் திட்டமிடுதல்’, ‘அரசு தகவல்தொடர்பு வளர்ச்சியின் பங்கு’ போன்றவை இரண்டு நாட்களில் நடைபெறும் முக்கிய அமர்வுகளாக இருக்கும்.
இவற்றில் முறையே, MyGov தலைமை செயல் அதிகாரி திரு அபிஷேக் சிங், வெளியுறவு அமைச்சக இணைச்செயலர் திரு அரிந்தம் பக்சி, JS (XP) MEA மற்றும் ஜி20 நாடுகளுக்கான இந்தியாவின் ஷெர்பா திரு அமிதாப் காந்த் ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக இருப்பர்.
மாநாட்டின் இரண்டாவது நாளில் முக்கிய உரையை ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆற்றுவார். மாநாட்டின் நிறைவு அமர்வில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகன் உரையாற்றுவார்.
திவாஹர்