அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அக்டோபர் 14 (நாளை) மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர். கே. சிங் நாளை மாநாட்டைத் தொடங்கி வைப்பார். ராஜஸ்தான் மாநில முதல்வர் திரு அசோக் கெலாட், மத்திய எரிசக்தி மற்றும் கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜர், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் திரு பகவாந்த் கூபா ஆகியோருடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இவர்களுடன், அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும், எரிசக்தித் துறையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள்.
மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை, திறன்மிகு கணக்கீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் சேமிப்பும், எரிசக்தித் துறை சீர்திருத்தங்கள், உரிய நேரத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், மின்சார நுகர்வோரின் உரிமைகள், 2030-ஆம் ஆண்டில் எரிசக்தி அமைப்புமுறை, எரிசக்தி பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.
எம்.பிரபாகரன்