தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் இதயமாக திகழும் திருச்சி மலைக்கோட்டை மாநகரத்தில் உள்ள கடைவீதிகளில் கடந்த 20 நாட்களாக கூட்டம் அலைமோதியது.
திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் தேவையான பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளின் நலன் கருதியும்,போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த வாரம் முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் சாலையோர மற்றும் தற்காலிக சிறு வியாபாரிகள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி இருந்தனர். தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி இரவு அன்று மழை பெய்யாமல் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முதல் வானம் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியது. ஆம், மழை பெய்யாத காரணத்தால் கிராமப்புற மக்களின் கூட்டம் திருச்சி மாநகர கடைவீதிகளில் அலைமோதியது. நேற்று காலை முதல் தொடங்கி இன்று அதிகாலை வரை மக்கள் வெள்ளத்தில் திருச்சி மாநகரம் மிதந்தது.
ஆங்காங்கே நடந்த சிறு, சிறு குற்ற சம்பவங்களை தவிர; மற்றப்படி வேறு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்காக திருச்சி மாநகர காவல் துறையினரை மனதாரப் பாராட்டலாம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com