தமிழக அரசு சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்திருப்பது ஓரளவுக்கு ஆறுதலானது .
அதாவது குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் கட்டணம் குறைப்பு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
குறிப்பாக 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என்பது தொழில் நிறுவனங்களை நடத்துவதில் உள்ள சிரமத்தை ஓரளவுக்கு குறைக்கும் .
அதே சமயம் ஏழை , எளிய , நடுத்தர மக்களின் வீடு , கடைகளுக்கான மின் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கின்றது .
எனவே பொது மக்களுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் .
ஏற்கனவே தமிழக அரசு சொத்துவரி , மின் கட்டணம் , பால் விலை ஆகியவற்றை உயர்த்தியதால் மக்கள் மீதுள்ள பொருளாதார சுமை கூடியுள்ளது , இந்நிலையில் சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல பொது மக்களுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .
எனவே தமிழக அரசுக்கு ஏழை , எளிய , நடுத்தர மக்களின் மீது அக்கறை இருக்குமேயானால் சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல பொது மக்களுக்கான கட்டணத்தையும் குறைக்க முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்