தமிழக அரசு , விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்பதை தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு விவசாயிகள் பயிர் காப்பீட்டின் முழு பயனை அடைவதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதாவது சம்பா , தாளடி , பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது . ஆனால் நடவு முடியும் தருவாயில் , தொடர் மழை , பொருளாதார சூழ்நிலை ஆகிய காரணங்களால் அரசு குறிப்பிட்ட 15 ஆம் தேதிக்குள் ஏழை , எளிய விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்தது .
குறிப்பாக நடவு பணி முழுமையாக முடிந்த பிறகு , அடங்கல் நகல் பெற்று காப்பீடு செய்ய முடியும் .
இச்சூழலில் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பருவ நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் , பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்ட தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டுகோள் வைக்கின்றனர் .
எனவே மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கிப் பருவமழை தீவிவிரமடைந்து , விவசாயப் பணிகள் தடைப்பட்டு , பயிர் நடவிலும் பாதிக்கப்பட்டு , காப்பீடும் செய்ய இயலாத சூழலில் உள்ள அனைத்து விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை இன்னும் நீட்டித்து தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்