தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை, மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வில்லிச்சேரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியை சுற்றி உள்ள சத்திரப்பட்டி, இடைச்சேவல், நாலாட்டின்புத்தூர், மெய்த்தலைவன் பட்டி, கார்த்திகைப்பட்டி, ஊத்துப்பட்டி, சீனிவாசா நகர், இந்திரா நகர், லட்சுமி மில் மேல் மற்றும் கீழ் குடியிருப்பு பகுதிகள், ஆவல்நத்தம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களின் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 20000 பொதுமக்கள் சிகிச்சை பெற்றும், பேறு காலத்தின் போது தாய்மார்களும் இந்த மருத்துவமனையை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.
மருத்துவமனை ஆறு படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இருப்பதாலும், பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் வில்லிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், மருத்துவ அலுவலர்கள் தங்கி பணி புரிவதற்கு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தும் அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறும்,
வில்லிச்சேரி பகுதியில் கடந்த 28.11.2022 அன்று இரவு திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் தரையோடு தரையாக சாய்ந்து விட்டது. பல விவசாயிகள் வருவாய் இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் நிவாரணம் கிடைத்திடவும், இயற்கைப் பேரிடர் நிதியிலிருந்து சிறப்பு நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம், மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமான கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளார்.
–கே. பி. சுகுமார்., UTL MEDIA TEAM, ullatchithagaval@gmail.com