மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு வாழ்வது தான் அவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கிறது .
மாற்றுத்திறனாளிகளுக்கென்று உலக தனித்திறமை இருக்கிறது . குறிப்பாக அவர்கள் உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று , பதக்கங்களைப் பெற்று பெருமை அடைவதை அனைவரும் அறிவோம் .
உடல் ரீதியாக , உள ரீதியாக குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் . அதற்காக அவர்களை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடாமல் , அவர்களின் உயர்வான வாழ்வுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் .
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது என்பது அவர்களின் தேவைகளை உணர்ந்து செய்வதாக அமைய வேண்டும் .
மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் . குறிப்பாக மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் கல்வி , வேலை வாய்ப்பு , தொழில் உள்ளிட்ட பலவற்றில் அவர்களின் முன்னேற்றத்துக்கு சலுகைகள் , ஊக்கத்திட்டங்கள் அளித்து செயல்படுத்த வேண்டும் .
மனிதாபிமான நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிகளை மதித்து , அவர்களின் தேவைகளை அறிந்து , அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து , அவர்களை சமுதாயத்தில் உயர்வான இடத்தில் வைக்க முயற்சிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .
மாற்றுத்திறனாளிகள் தங்களின் கடின உழைப்பை தொடர்ந்து மேற்கொண்டு , வாழ்வில் மேம்பட்டு , நல்வாழ்க்கை வாழ வேண்டும் .
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு த.மா.கா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு , த.மா.கா என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்