இந்தியா உள்பட 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு கடந்த ஆண்டு இந்தோனேஷியாவிடம் இருந்தது. இதையொட்டி கடந்த மாதம் அந்நாட்டின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் முடிவில் ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்பட்டது. ஜி-20 தலைமையை பிரதமர் மோடியிடம் முறைப்படி இந்தோனேசியா ஒப்படைத்தது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பு வகிக்கும்.
அந்த வகையில் இந்தியாவுக்கு ஜி-20 மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறது. ஜி-20 மாநாடு தொடர்பாக 32 துறைகளின் சார்பில் 200 ஆலோசனைக் கூட்டங்களை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டங்களை தமிழகத்தில் நடத்தும் இடங்களில் தஞ்சை, கோவை ஆகியவையும் பரிசீலனையில் உள்ளன. இதற்கான ஆலோசனைகளை தமிழக அரசிடம் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையிலிருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர். முதல்வருடன் செயலாளர் உதயச்சந்திரன், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர்.
எஸ்.திவ்யா