தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு.

புது தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் இன்று (டிசம்பர் 10, 2022) ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) 1948 ஆம் ஆண்டு இதே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார். இது முழு மனிதகுலத்திற்கும் ஒரு முக்கியமான நிகழ்வு என்று அவர் கூறினார். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (யுடிஹெச்ஆர்) ஆவண விளக்கங்கள் 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் இது வரலாற்றில் மிகவும் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் பல பகுதிகளில் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான மோசமான நிகழ்வுகளை நாம் கருத்தில் கொள்ளும்போது, ஐநா-வின் இந்த பிரகடனம் மொழிபெயர்க்கப்பட்டு அது புரிந்து கொள்ளப்பட்டதா என்று ஆச்சரியப்படும் நிலை உள்ளது என்று அவர் கூறினார். மனித உரிமைகள் என்பது உலகம் முழுவதுமானதுக்கான செயல்திட்டப் பணியாக உள்ளது என்பதுதான் உண்மை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதில் நாம் திருப்தி அடையலாம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இப்போது தனது 30 வது ஆண்டில், அடி எடுத்து வைத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த அமைப்பு மனித உரிமைகளுக்கான பல்வேறு உலகளாவிய மன்றங்களில் பங்கேற்கிறது என்றும் இந்தியாவின் பணி சர்வதேச அளவில் பாராட்டப்படுவது பெருமை அளிப்பதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

மனித உரிமைகள் தொடர்பான உணர்திறன் மற்றும் கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  இது அடிப்படையில் கற்பனைத் திறன் தொடர்பான ஒரு நடவடிக்கையாகும் என்று கூறிய அவர், மனிதர்களை விட குறைவாக நடத்தப்படுபவர்களின் இடத்தில் நம்மை கற்பனை செய்து பார்க்க முடிந்தால், அது நம் கண்களைத் திறந்து, மனித உரிமைகள் தொடர்பாக தேவையானதைச் செய்ய நம்மைத் தூண்டும் என்று கூறினார். “பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள்” என்ற முக்கியமான ‘தங்க விதி’ ஒன்று உள்ளது என அவர் தெரிவித்தார். இந்த வாசகம் மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply