நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் நலனுக்குக் கேடு விளைக்கும் செயற்கையாகச் செறிவூட்டப்பட்ட அரிசியினை வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முனையும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மக்களின் உடல் நலத்திற்குத் தீங்கினையே அதிகம் விளைவிக்கும். கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான சத்துக்களை மட்டும் செயற்கையான முறையில் வழங்குவதென்பது அச்சத்துக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும். மற்றவர்களுக்குக் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்களே கூறுகின்றபோது எதன் அடைப்படையில் செயற்கையாகச் செறிவூட்டப்பட்ட அரிசியினை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது? செறிவூட்டப்பட்ட அரசியினை வழங்கி மக்களின் உடல்நலத்தை மேம்படுத்த முடியும் என்று அரசு எந்த ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்தது? அல்லது அதனைச் சோதிப்பதற்கான சோதனை எலிகளாக தமிழ்நாட்டு மக்களை மாற்ற நினைக்கிறதா திமுக அரசு? முழுமையாகச் சோதனை செய்து உறுதிப்படுத்தாது பாஜக அரசு கொண்டுவந்துள்ள செயற்கை செறிவூட்டல் அரசி வழங்கும் திட்டத்தை அவசர அவசரமாக தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய தேவை திமுக அரசிற்கு என்ன வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது.
பசுமை புரட்சி என்ற பெயரில் அதிகச் சத்துக்கள் நிறைந்த தமிழ் மண்ணின் மரபுவழி நெல் ரகங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டு, குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் எனக்கூறி செயற்கை நெல் ரகங்களை விவசாயிகளிடம் திணித்தது இந்திய ஒன்றிய அரசு. அத்தகைய குட்டை நெல் ரகங்கள் விளைவதற்குக் கொட்டப்பட்ட செயற்கை வேதி உரங்களால் மண் மலடானதோடு, கால்நடைகளின் உணவுத்தேவையான வைக்கோலும் இல்லாமல் போய் அவற்றின் எண்ணிக்கையும் முற்றாகக் குறைந்தது. இதனால்
உழவு இயந்திரங்களையும், வேதி உரங்களையும் விற்கும் சந்தையாகவும் தமிழ்நிலம் மாறிநிற்கிறது.
அதுமட்டுமின்றி அறிவியல், வளர்ச்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் திணிக்கும் முயற்சிகளையும் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தற்போது செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் மக்களுக்குச் செயற்கை அரிசியைக் கலந்து வழங்க இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
ஒரு கிலோ அரிசியில் வெறும் பத்துகிராம் மட்டும் செறிவூட்டப்பட்ட அரிசியைச் சேர்ப்பது எவ்வாறு அனைத்துவகை மக்களுக்கும் அனைத்துவகைச் சத்துக்களும் கிடைக்க உதவும்? மக்களிடம் செறிவூட்டப்பட்ட அரிசியிலேயே அனைத்து சத்துக்களும் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதனை வாங்க ஊக்கப்படுத்துவதென்பது விவசாயிகள் மற்றும் சிறுகுறு அரிசி வணிகர்ளுக்கு மிகப்பெரிய பாதிப்பையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். எனவே செயற்கையாகச் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதென்பது அதனை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் இலாபமடையவும், அதனை வாங்கி விற்கும் அரசியல்வாதிகளுக்குத் தரகுத்தொகை கிடைக்கவும் மட்டுமே உதவுமே தவிர மக்களுக்குத் தீமையையே விளைவிக்கும்.
இயற்கையின் அருட்கொடையால் பொழியும் நன்னீரான மழைநீரை வீணாகக் கடலில் கலக்கவிட்டுப் பின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகள் தனியார் நிறுவனத்திற்குக் கொட்டிக் கொடுப்பதுபோல், தற்போது இயற்கையாகச் சத்தான நமது மரபுவழி நெல் ரகங்களை அழித்து முடித்துவிட்டு, செயற்கையாகச் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவோம் என்பது முழுக்க முழுக்க அறிவுக்குப் புறம்பான நடவடிக்கையேயாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடைகள் மூலம் செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தைக் கைவிட்டு, இயற்கையான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த தமிழர்கள் மரபுவழி அரிசி வகைகளை விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவற்றை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்
இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்