தமிழக அரசு, ஆசிரியர் மற்றும் செவிலியர் ஆகியோரின் பணி மிக மிக அவசியமான முக்கியப்பணி என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி கற்பித்தல் பணியில்
ஈடுபடும்போது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் ஆசிரியர்கள் மன நிம்மதியுடன் பணியாற்றுவார்கள். ஆனால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதல் 6 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, காரணத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகே ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் முடிவானது கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் இடைநிலை ஆசிரியர்கள்.
அதே போல கொரோனா காலச்சூழலில் செவிலியர்களுக்கு பணி வழங்கிய போது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்னும் உறுதி அளித்தது தமிழக அரசு. அதற்கேற்ப தற்போதைய தமிழக அரசு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஆனால் தமிழக அரசு செவிலியர்களின் பணிக்காலம் 2022, டிசம்பர் 31 அன்று நிறைவடைந்ததாக அறிவித்தது. இதனால் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வேளையில் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று செவிலியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம் பணி வழங்கியது சம்பந்தமாக, குளறுபடிகளை விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் பணியாற்றுவதே அர்ப்பணிப்பான, மனித நேயப்பணி. சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி வழங்கியது தொடர்பாக குளறுபடி என்றால் பணி புரிந்தவர்களின் நிலை என்னவாகும்.
எனவே தமிழக அரசு, குளறுபடி, குழு அமைத்தல் என்று அறிவிப்பதைவிட பணி வழங்கும்போது பணி நிரந்தரம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
எனவே தமிழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆசிரியர்கள், செவியிலியர்கள் ஆகியோருக்கு அளித்த வாக்குறுதியை, கால தாமதம் செய்யாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா