சியாச்சினில் பணியமர்த்தப்பட்டது முதல் போர்க்கப்பல்களில் பணியமர்த்தப்படுவது வரை, இந்தியப் பெண்கள் ஆயுதப்படைகளில் தடைகளை உடைத்து சாதனை படைக்கிறார்கள்: லக்னோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.

உலகின்  மிக  உயரமான  போர்க்களப்பகுதியான சியாச்சினில்  பணிபுரிவது  முதல் போர்க்கப்பல்களில்  பணியமர்த்தப்படுவது  வரை, இந்தியப்  பெண்கள்  ஆயுதப் படையின்  அனைத்துத்  துறைகளிலும்  தடைகளை  உடைத்து  சாதனை படைத்து வருகின்றனர் என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒருங்கிணைந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (ஜனவரி 13, 2023) பேசிய அவர், பாதுகாப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள்  வெற்றி பெற்று வருவதாகக் கூறினார். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு  அதிக  வாய்ப்புகளை அரசு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக  அளவில்  வளர்ந்து  வரும்  இந்தியாவின் செல்வாக்கு குறித்தும் அவர் பேசினார். உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வரும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட ராஜதந்திர செயல்பாடுகளை அவர் குறிப்பிட்டார். உலக  அரங்கில் இந்தியாவின்  முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாகவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய  தலைமையால் இது சாத்தியமானதாகவும் அவர்  கூறினார்.

உலகின்  ஐந்தாவது  பெரிய  பொருளாதார நாடாக  இந்தியா  மாறி இருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சீரிய தலைமையின்  கீழ்  செயல்படும் அரசின் முயற்சிகளைப்  பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். உலக நாடுகளில்  இந்தியாவை  இன்னும்  வலிமையானதாக  மாற்றுவதற்கான  மத்திய அரசின்   உறுதிப்பாட்டை  அவர்  மீண்டும்  சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள  வலுவான  டிஜிட்டல்  உள்கட்டமைப்புகள், மக்களுக்கு எளிதான வாழ்வை உறுதி செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில்  டிஜிட்டல்  புரட்சியின் ஒவ்வொரு  அம்சத்திலும்  சிறந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, 2022 டிசம்பரில்  ரூ.12.82 லட்சம் கோடிக்கு மேல் நடந்ததாகத் தெரிவித்தார். மருத்துவம்,  நிதித் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிற துறைகளில் டிஜிட்டல் அம்சங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இது நாட்டின் தொலைதூர  கிராமப்புறங்களில்  உள்ள மக்களின் வாழ்க்கையை  மேலும் மேம்படுத்த  வழிவகுக்கும்  என்று  அவர் நம்பிக்கை  தெரிவித்தார்.

இளைஞர்கள்தான்  நாட்டின் எதிர்காலம் என்று கூறிய அவர், எந்தவித பாரபட்சமும் இன்றி மக்களுக்குச் சேவை செய்யுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், அது  எப்போதும்  வெற்றிக்கு  வழிவகுக்கும் என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இணைந்தவை என்று கூறிய அவர், தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதும் அவற்றை எதிர்கொண்டு மீள்வதும் முக்கியம் என்றார். சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான நேர்மறையான அணுகுமுறையும் உறுதியும் தான் ஒருவரை சிறப்புறச் செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.  அறிவு  அனைவரின்  நலனுக்காகவும் பயன்படுத்தப்படும்போது அது விலைமதிப்பற்றதாக மாறும் என்று அவர் கூறினார். சிறந்த தேசத்தைக் கட்டமைப்பதற்கும் உலகை மிகச் சிறந்த இடமாக மாற்றுவதற்கும் புதிய வழிகளை  ஆராயுமாறு   மாணவர்களுக்கு திரு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார். 

திவாஹர்

Leave a Reply