பிரதமர் நரேந்திர மோதி அறிமுகப்படுத்திய நல்லாட்சி சீர்திருத்தம் காரணமாக பெண்களுக்கு உகந்த பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

பிரதமர் நரேந்திர மோதி அறிமுகப்படுத்திய நல்லாட்சி சீர்திருத்தம் காரணமாக பெண்களுக்கு உகந்த பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக  மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி  அறிவியல், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார். 

ஊழியர் நலத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த அவர், ஊழியர் நலன் மற்றும்  ஓய்வூதியத்துறை,  பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வாய்ப்புகளை மத்திய அரசின் வேலைவாய்ப்பில் உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குழந்தை பராமரிப்பு விடுமுறையை பொறுத்தவரை 730 நாட்கள் வழங்கப்படும் நிலையில், இந்த விடுமுறையின் போது விடுமுறை பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் இந்த விடுமுறையின் போது வெளிநாட்டுப் பயணத்திற்கான சலுகைகளையும் அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிப்பதற்கான விடுமுறை சலுகையை 15 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைக்கும் விதி 43சி, பெண்களின் நலன் கருதி நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மாற்றுத்திறனாளி பெண்கள் தங்கள் குழந்தையை பராமரிக்க ஏதுவாக அவர்களது அகவிலைப்படியில் 25 சதவீதத் தொகையான மாதம் 3 ஆயிரம் ரூபாய் சிறப்புப் படியாக  வழங்கப்பட்டு வந்தது.    இதனை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை கடந்த 2022 ஜூலை 1 ஆம் தேதி முதல்  மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எம். பிரபாகரன்

Leave a Reply