முன்னேற விரும்பும் மாவட்டங்களின் முன்னோடி மாவட்ட மேலாளர்கள் (எல்டிஎம்) மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் குழு (எஸ்எல்பிசி) ஒருங்கிணைப்பாளர்களுடன் மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் திரு விவேக் ஜோஷி தலைமையில் இன்று புதுதில்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தி நித்தி ஆயோக், பஞ்சாயத்து ராஜ் நிதிச்சேவைகள் துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னேற விரும்பும் 112 மாவட்டங்களில் இலக்கு நிதி உள்ளடக்க இடையீட்டுத் திட்டத்தின் (டிஎஃப்ஐஐபி) முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உத்கர்ஷ் திட்டத்தின் கீழ் உள்ள 10 மாவட்டங்களில் அத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எஸ்எல்பிசி மற்றும் எல்டிஎம்-களின் முயற்சிகளைப் பாராட்டிய நிதி சேவைகள் துறை செயலாளர் திரு ஜோஷி, இலக்குகளை எட்டுவதற்கு மேலும், உத்வேகத்துடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த மாவட்டங்களில் கடன்களை அதிக அளவு வழங்குவதற்கு வங்கிகள் செயல்பாட்டை அதிகரிக்குமாறு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு வங்கி சேவை மையம் இருப்பதை உறுதி செய்யுமாறும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் உதவியுடன் நிதி சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முகாம்களை அதிக அளவு நடத்துமாறும் வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. சிறப்பாக செயல்படும் மாநில அளவிலான வங்கியாளர் குழுக்களுக்கு அங்கீகாரம் மற்றும் விருதுகள் வழங்குவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது