பலவகைப் பணிக்கான (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் தேர்வு 2022-ஐ முதன்முறையாக இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் 13 மாநில மொழிகளில் நடத்துவது என்ற எஸ்எஸ்சி முடிவை மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
13 மொழிகளாவன: உருது, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி.
வேலை தேடுவோர் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும், மொழி காரணமாக ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்ட அடிப்படையிலானது இந்த நடவடிக்கை என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஏற்கனவே இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களை குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த மாணவர்களின் நீண்ட கால நிலுவை கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கையாகவும் இது உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்குப் பின் படிப்படியாக அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
2022 நவம்பரில் வாரணசியில் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தபோது, உலகின் மிகத்தொன்மையான வாழும் மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளபோதும் அதனை முழுமையாக கௌரவப்படுத்த நாம் தவறிவிட்டோம் என்று கூறியதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.
எஸ்.சதிஷ் சர்மா