மாநிலங்கள் மற்றும் மாநில மின்சாரப் பயன்பாட்டு நிறுவனங்களுடன், திட்டமிடுதல், கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கூட்டம் புதுதில்லியில் 23,24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமை வகித்தார். மின்சாரத்துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் முன்னிலை வகித்தார்.
மின்சாரத்துறையின்அனைத்து சம்பந்தப்பட்ட பிரிவினரின் ஒட்டுமொத்த முயற்சியால், மின்சார இழப்பு 2021-22-ல் 5 சதவீதம் குறைந்ததாக திரு ஆர் கே சிங் கூறியதுடன், இதற்கான முயற்சிகளைப் பாராட்டினார். மின்சார இழப்பில் 3 சதவீதத்திற்கும் மேல் குறைத்த மாநிலங்களை அமைச்சர் பாராட்டினார். ஆந்திரா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இழப்பு குறைந்துள்ளது. குஜராத், இமாச்சலப்பிரதேசம், கேரளா, உத்தராகண்ட், ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து இழப்பை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்துள்ளன.
மின்இழப்புகளை குறைப்பது, மானிய கணக்குகளை முறையாக பராமரிப்பது போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மின் விநியோகத்தில் திறமையின்மையை சமாளிக்க வேண்டியது அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் நிலை குறித்து ஆய்வு நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், இந்த ஆய்வின் முடிவுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு நாடு முழுவதும் 24 மணி நேரமும், மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எஸ். சதிஷ் சர்மா