ரயில்வே பாதுகாப்பு படை, 2022-ஆம் ஆண்டு மேற்கொண்ட முக்கிய சாதனைகள்:
• ரயில் சுரக்ஷா இயக்கத்தின் கீழ் ரயில்வே சொத்துக்களை திருடியதற்காக 6492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 7.37 கோடி மதிப்பிலான களவு போன ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டு, 11268 பேர் கைது செய்யப்பட்டனர்.
• 17,756 குழந்தைகள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
• ஆட்கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் ரயில்வே காவல் படை, 2022- ஆம் ஆண்டில் 559 பேரை கடத்தல் சம்பவங்களில் இருந்து மீட்டதோடு, 194 பேரை இந்த குற்றத்திற்காக கைது செய்தது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பணியாளர்களின் திறனை கட்டமைத்தல், ஆட்கடத்தல் சம்பந்தமான தகவல்களை பரிமாறுதல் முதலிய செயல்பாடுகளுக்காக தன்னார்வ அமைப்புடன் ரயில்வே பாதுகாப்பு படை 06.05.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
• போதை பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 80 கோடி மதிப்பிலான போதை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
• வன உயிரினங்கள், விலங்குகளின் பாகங்கள் மற்றும் வனப் பொருட்களைக் கடத்தியதற்காக 75 பேர் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாக வன உயிரினங்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
• புகையிலை பொருட்கள், மது, கணக்கில் காட்டப்படாத தங்கம், பணம், விலை உயர்ந்த உலோகங்கள், கடத்தல் பொருட்கள், ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் போன்ற பொருட்களை ரயில்களில் கொண்டு வந்த குற்றத்திற்காக 2331 பேர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா