தேர்வு குறித்த கலந்துரையாடலின் 6-வது அத்தியாயத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இன்று புதுதில்லி தல்கத்தோரா விளையாட்டு மைதானத்தில் கலந்துரையாடினார். கலந்துரையாடலுக்கு முன்பு மாணவர்கள் காட்சிப்படுத்தி வைத்திருந்த பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டார். பிரதமரின் சிந்தனையில் உருவான தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருடன் வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல்வேறு பொருள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். இந்த ஆண்டு, 155 நாடுகளிலிருந்து சுமார் 38.80 லட்சம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், முதல் முறையாக இந்த ஆண்டு, குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களின் போது நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினார். பிற மாநிலங்களிலிருந்து புதுதில்லி வந்துள்ளவர்கள் குடியரசு தின விழாக் காட்சிகளை காணும் வாய்ப்பை பெற்றனர். தேர்வு குறித்த கலந்துரையாடலின் முக்கியத்துவம் பற்றி, இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான கேள்விகள் பதிவேற்றப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இளைய தலைமுறையினரின் எண்ணங்களை காணும் வாய்ப்பு இதன் மூலம் தமக்கு கிட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்தக் கேள்விகள் எனக்கு பொக்கிஷம் போன்றவை” என்று பிரதமர் கூறினார். இந்த அனைத்துக் கேள்விகளையும் தொகுக்க வேண்டுமென தாம் விரும்புவதாகக் கூறிய அவர், வரும் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானிகள் இவற்றை பகுப்பாய்வு செய்யும் போது இளம் மாணவர்களின் எண்ணங்களின் எத்தகைய சிந்தனைகள் உதயமாகி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஏமாற்றத்தைக் கையாளுதல்
தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா மாணவி அஸ்வினி, தில்லி பீதாம்புரா கேந்திரிய வித்யாலயாவைச் சேர்ந்த நவ்தேஜ், பாட்னாவின் நவீன் பாலிகா பள்ளியின் பிரியங்கா குமாரி, ஆகியோர் எழுப்பிய, குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஏற்படும் குடும்பத்தின் ஏமாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை தவறு என்று கூற முடியாது என்றார். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் சமூக அந்தஸ்து காரணமாக உள்ள எதிர்பார்ப்புகளாக இருந்தால் அவை கவலையளிக்கக் கூடியதுதான் என்றார். அதிகரித்து வரும் செயல்பாடுகளின் தரம் குறித்தும் ஒவ்வொரு வெற்றியுடனும் வளரும் எதிர்பார்ப்புகள் குறித்தும் திரு.மோடி பேசினார். எதிர்பார்ப்பு வலை சூழ்வதைக் கண்டு பணிந்து விடுவது நல்லதல்ல என தெரிவித்த அவர், ஒருவரது சொந்தத் திறமைகள், தேவைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் எதிர்பார்ப்புகளை பொருத்திப் பார்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டை உதாரணமாக கூறிய பிரதமர், பவுண்டரிகளும். சிக்சர்களும் அடிக்கப்படும்போது உற்சாகமடையும் கூட்டத்தினரின் முழக்கங்கள் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு இடையூறாக இருப்பதில்லை என்று தெரிவித்தார். கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீரரின் கவனத்தைப் போல மாணவர்களின் படிப்பும் இருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், நீங்கள் கவனத்துடன் இருந்தால் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தார். எதிர்பார்ப்புகளை வைத்து குழந்தைகள் மீது பெற்றோர் சுமையை ஏற்றக் கூடாது என்று வலியுறுத்திய அவர், மாணவர்கள் தங்களது ஆற்றலுக்கு ஏற்ப எப்போதும் தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், அழுத்தங்கள் தங்களது சொந்த ஆற்றலுக்கு ஏற்றதா இல்லையா என்று ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய சூழலில் இந்த எதிர்பார்ப்புகள் சிறந்த செயல்பாட்டுக்கு தூண்டுகோலாக இருக்கக்கூடுமென்று தெரிவித்தார்.
தேர்வுகளுக்கு தயாராதல் மற்றும் நேர மேலாண்மை
தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது பற்றி தெரியவில்லை. மனஅழுத்தம் நிறைந்த சூழ்நிலையால் மறதி ஏற்படுகிறது என்று டல்ஹவுசி கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த 11-வது வகுப்பு மாணவர் ஆரூஷி தாக்கூரின் கேள்வி, நேர மேலாண்மை குறித்த ராய்ப்பூர் கிருஷ்ணா பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த அதிதி திவானின் கேள்வி ஆகியவற்றுக்கு பதிலளித்த பிரதமர், தேர்வுகள் உள்ளனவோ இல்லையோ பொதுவாழ்வில் நேர மேலாண்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். வேலை என்பதும் ஒருவரை களைப்படையச் செய்யாது. வேலை இல்லாமைதான் ஒருவரை களைப்படைய வைக்கும் என்று கூறிய அவர், பல்வேறு விஷயங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்து மாணவர்கள் குறித்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். விரும்புகின்ற விஷயங்களுக்கு அதிக நேரத்தை செலவிடுவது ஒருவரது பொதுவான அணுகுமுறைதான். ஆர்வம் குறைந்த அல்லது மிகக் கடினமான பாடங்களை உள்ளம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் போது நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எதையும் திணிப்பதை விடுத்து ஓய்வான மனநிலையில் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயல வேண்டும். வீட்டில் தாய்மார்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நேரப்படி செய்வதை கவனிக்கும் மாணவர்கள், நேர மேலாண்மையை எளிதில் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் இவ்வளவு வேலைக்கு இடையே களைப்படைவதை நாம் பார்க்க முடியாது. அதிலும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி சில படைப்பாற்றல் வேலைகளை செய்வதை நாம் காணலாம். மாணவர்கள் தங்களது அன்னையரை கவனித்து நுணுக்கமான நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பெரிய பயன்களுக்கு உங்களது நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
திவாஹர்